Breaking News LIVE: “இந்த தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர்” - மதிமுக தலைவர் வைகோ பரப்புரை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
மீனவர்களின் இன்னல்களை கண்டுகொள்ளாத கட்சி பாஜக என இபிஎஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து, இபிஎஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறையில் சிறுத்தையை பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் வரும் 17, 18 மற்றும் 19 ஆகிய மூன்று நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.
“மணிப்பூர் கலவரத்தின்போது தக்க நேரத்தில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் அம்மாநிலத்தின் சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டது!” - பிரதமர் மோடி
பிரதமரின் தேர்தல் பரப்புரை நடத்தை விதிகளுக்கு எதிராக உள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாகன பேரணி மேற்கொண்டுள்ளார். சாலையின் இருபுறமும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பளித்தனர்.
மக்களவை தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற கேள்விக்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ பதிலளித்துள்ளார். தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் இடைத்தேர்தல் குறித்த தகவல் வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தருமபுரி தொகுதியில் அமைச்சர் உதயநிதி பரப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “தருமபுரி தொகுதியில் மணி வெற்றி பெறுவது உறுதி என்பதை, உங்கள் எழுச்சியை பார்த்து தெரிந்து கொண்டேன். தமிழ்நாடு மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் வேட்டு வைக்கிறார். வரும் 19-ம் தேதி நடைபெறும் தேர்தலில் நாம் மோடிக்கு வேட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை, சுயமரியாதை என்ன என்பதை தெரிந்து கொள்வார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பாஜகவும், பழனிசாமியும் செங்கல் நட்டார்கள். ஆனால் இன்று வரை வரவில்லை. அதனால் அந்த செங்கல்லை நான் பிடிங்கிட்டு வந்துட்டேன். நட்டது ஒரே செங்கல். அதை நான் எடுத்துட்டு வந்துட்டேன். இப்பொழுது செங்கல்லை காணோம் என்று தேடுகிறார்கள். நான் மருத்துவமனை கட்டினால் மட்டுமே செங்கல்லை கொடுப்பேன் என சொல்லிவிட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று கேட்டால், பிரதமர் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் பழனிசாமி பதில் தருகிறார். ஏனென்றால் இவர்கள் இருவரும் கள்ளக் கூட்டணி. பாஜக ஆளும் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
நாம் 1 ரூபாய் வரி கட்டினால், நமக்கு 29 பைசா கொடுக்கிறார். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் கொடுக்கிறார்கள். அதனால் தான் அவருக்கு 29 பைசா மோடி என பெயர் வேத்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
உடல்நலக்குறைவால் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி காலமான நிலையில், அந்த சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்னும் 2 நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா குறித்து பேச திமுகவுக்கு பேச அருகதை இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
சென்னை பாண்டி பஜாரில் நடைபெறும் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு நிபந்தனைகளுடன் சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. துண்டு பிரசுரங்கள், அடையாள அட்டைகள் விநியோகிக்க தடை உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு பொறுப்பாளர் அஜோய்குமார், தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்டோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
தமிழ்நாட்டில் கடந்த 3 தினங்களாக 44 இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைதாகியுள்ள பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. தனது மைனர் மகனின் பள்ளித் தேர்வுகளை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் கோரியிருந்தார். ஆனால், சட்டப்படி பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் கவிதா போன்ற பெண் அரசியல்வாதிகளுக்குப் பொருந்தாது என்று அமலாக்கத்துறை வாதிட்டது. அதையேற்று ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருப்பத்தூரில் 3 மாத காலமாக குடிநீர் சரியாக வருவதில்லை எனவும் மேலும் குடிநீருடன் புழுக்கள் கலந்து வருவதால் பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக திருப்பத்தூர் நகராட்சி சார்பில் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
மேலும் குடிநீரில் கழிவு நீர் கலந்து குழுக்களுடன் வருவதால் இது குறித்து பலமுறை திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது இதன் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் 20க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு இதற்கு தீர்வு காணப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர் இதன் காரணமாக சிறிது நேரம் அப்போதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக பறக்கும் படை அதிகாரி தினேஷ் குமார் தந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கவிதாவுக்கு இடைக்கால பிணை வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கியது. இதில் 4,538 பேரிடம் இருந்து வாக்குகள் பெறப்பட உள்ளது.
2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றுடன் (ஏப்.8) முடிகின்றன. ஏப்ரல் 12ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம் தொடங்க உள்ளது.
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா தொடங்கியது - வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மதியம் 2 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியானது நடைபெறுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660 க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.88க்கு விற்பனை ஆகிறது.
நாமக்கல்லில் பாஜக சார்பில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்க மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று தமிழகம் வருகிறார். பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து இன்று பரப்புரை மேற்கொள்கிறார். சேலத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வரும் ராஜ்நாத்சிங் நாமக்கல் - பரமத்தி சாலை பிஜிபி கல்லூரி வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் இறங்குகிறார். மதியம் 12 மணிக்கு நாமக்கல் எம்.ஜி.எம் தியேட்டர் அருகே ரோடு ஷோ ஆரம்பித்து பஸ்டாண்டில் முடிவடைகிறது.
மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். விசாரணை நீதிமன்றங்களில் மனுதாக்கல் முறையை எந்தவித கட்டமைப்பு வசதியும் செய்யாமால் இ-பைலிங் ஆக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிப்பதாக அறிவிப்பு
சென்னை மெட்ரோ பணிகள் காரணமாக அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, டிடிகே சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பாலம் இடிக்கும் பணி நடைபெறுவதால் 6 நாட்கள் இரவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Background
- பிரதமர் மோடி மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை வரும் அவர் பாண்டி பஜார் ரோட்டில் நடக்கும் வாகன பேரணியில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி வருகையால் சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில் வாகன பேரணி நடக்கும் இடங்களில் இருப்பவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை களைகட்டியுள்ள நிலையில் டெல்லியில் இருந்து பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வாக்கு சேகரிக்க வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நேற்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாட்டில் 4 தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இந்நிலையில் இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வருகிறார். நாமக்கலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாகன பேரணியில் ஈடுபட்டு வாக்கு கேட்கவுள்ளார்.
- ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியுடன் இன்று மோதுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று மீண்டும் பழைய ஃபார்மை நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் அந்த அணி 2 வெற்றி, 2 தோல்விகளை பெற்றுள்ளது. அதேசமயம் கொல்கத்தா அணி 3 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று பலமான அணியாக திகழ்கிறது.
- மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில் இன்று தொடங்குகிறது. மாற்றுத் திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருக்கும் 3 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 67 குழுக்கள் இந்த பணிகளில் ஈடுபடுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -