குடியரசு தலைவர் தேர்தலில், மனுவை வாபஸ் பெற வேண்டுவதாக எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு பாபா சாகேப் பி.ஆர்.அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கோரிக்கை விடுத்துள்ளார். 


குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். இதற்காக திரௌபதி முர்மு வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளார். அவரின் வேட்பு மனுவுக்கு ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். எதிர்க்கட்சி சார்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.  ஜூலை 18ஆம் தேதி, குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.


இதுவே முதன்முறையாக இருக்கும்:


ஒடிசாவின் முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர், குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரான முர்மு, 2015 முதல் 2021 வரை பதவி வகித்தார். இவர் குடியரசுத் தலைவரானால் குடியரசுத் தலைவராகும் முதல் பழங்குடியினப் பெண் என்ற அந்தஸ்தையும் பெறுவார்.


மனுவை வாபஸ் பெறுக:


இந்நிலையில், பிரகாஷ் அம்பேத்கர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில், யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சிகளில் பழங்குடியின மற்றும் பட்டியலின உறுப்பினர்கள் திரெளபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களிக்க இருக்கின்றனர். ஆகையால் யஷ்வந்த் சின்ஹா இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் மனுவை வாபஸ் பெற வேண்டும் என்று கோரியுள்ளார்.






பயணத்தை ரத்துசெய்த சின்ஹா:


இதற்கிடையில் யஷ்வந்த் சின்ஹா தனது மும்பை பயணத்தை ரத்து செய்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து யஷ்வந்த் சின்ஹா தனது மும்பை பயணத்தை ரத்து செய்துள்ளார். அவர் மும்பை சென்று மகா விகாஸ் அகதி கூட்டணித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவதாக இருந்தார். உத்தவ் தாக்கரே, சிவசேனா திரெளபதி முர்முவை ஆதரிக்கும் என்று கூறினார். இதற்கு அவர் காரணமாக முதன்முறையாக ஒரு பழங்குடியினப் பெண் போட்டியிடுவதால் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டுமென்றார். அதேபோல் தனது கட்சியின் எம்எல்சி அமஷ்ய பாட்வி, முன்னாள் எம்எல்ஏ நிர்மலா கவித், சிவாஜிராவ் தவாலே ஆகியோர் தன்னிடம் சிவசேனா முர்முவை ஆதரிக்க வேண்டும் என்று கோரியதாலும் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.