உத்தரபிரதேச மாநிலத்தில் பெண் கான்ஸ்டபிளுடன் ஒன்றாக தனி விடுதியில் தங்கியிருந்த காரணத்திற்காக ஆண் டி.எஸ்.பி. தற்போது கான்ஸ்டபிளாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசம் டி.எஸ்.பி:
கிருபா சங்கர் கானோஜியா என்பவர் உத்தர பிரதேச மாநிலத்தில் டி.எஸ்.பி காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு உன்னாவ் மாவட்டத்தில் டி.எஸ்.பி அதிகாரியாக பணியாற்றி வந்த போது, சொந்த காரணங்கள் இருப்பதாக தெரிவித்து ஒரு நாள் விடுப்பு எடுத்திருந்தார். அன்றைய தினத்தில், அவர் தனது கைப்பேசியும் சுவிட்ச் ஆஃப் செய்திருக்கிறார்.
இந்நிலையில், கிருபா சங்கரை தொடர்பு கொள்ள அவரது மனைவி முயற்சித்த போது, அவரது கைப்பேசி சுவிட்ச் ஆஃப் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதனால், தனது கணவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, தேடலில் இறங்கிய காவல்துறையினர், கிருபா சங்கர் ஒரு தனி விடுதி அறையில் இருப்பது தெரியவந்தது. அங்கு சோதனை நடத்தியதில், அங்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் மற்றொரு பெண் கான்ஸ்டபிளுடன் இருப்பதை கண்டறிந்தனர்.
பதவியிறக்கம்:
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கிருபா சங்கர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது, கிருபா சங்கரை டி.எஸ்.பி பதவியிலிருந்து கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்து, அந்த மாநில டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்தார்.
டி.எஸ்.பி-யாக பதவி வகித்த காவல் அதிகாரி, கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்யப்பட்ட சம்பவமானது , அம்மாநிலத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.