தலித், பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களுக்கு இணையாக தென் மாநிலங்களிலும் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.


தெலங்கானாவில் நடந்தது என்ன?


இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் பழங்குடியின பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகர்கர்னூல் மாவட்டத்தில் பொது இடத்தில் வைத்து ஒரு வாரமாக பழங்குடியின பெண்ணை சித்திரவதை செய்துள்ளனர். கடுமையாக தாக்கி, கண்களிலும் பிறப்புறுப்பிலும் மிளகாய் தூள் தடவியுள்ளனர். பிறப்புறுப்பில் சூடு வைத்ததாகவும் கூறப்படுகிறது.


பெண்ணை சித்திரவதை செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், இளஞ்சிவப்பு சேலை அணிந்த பாதிக்கப்பட்ட பெண் குத்த வைத்து உட்கார்ந்திருக்கிறார். அவரை சுற்றி இருக்கும் கிராமவாசிகள் கூச்சலிடுகின்றனர்.


வேலை செய்ய மறுத்ததால் பழங்குடி பெண்ணுக்கு டார்ச்சர்:


அசைய முடியாத அளவுக்கு அவர் உட்கார்ந்திருக்கும்போது, ஆரஞ்சு புடவை அணிந்த பெண் ஒருவர், பிரம்பை எடுத்து வந்து அவரை மிரட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. திடீரென அங்கிருக்கும் நபர் ஒருவர், வன்முறையில் ஈடுபடுகிறார்.


அமைதியாக அமர்ந்திருக்கும் பழங்குடியின பெண்ணின் கழுத்தை பிடித்து தரதரவென இழுத்து சென்று கீழே தள்ளிவிடுகிறார். காலை வைத்து சரமாரியாக மிதித்துள்ளார். அந்த நபரை மற்றவர்கள் அழைத்து செல்கின்றனர்.


அப்போது, அந்த பெண் தப்பிக்க முயல்கிறார். ஆனால், அந்த பெண்ணை பிடித்த மற்றொரு நபர் மீண்டும் கீழே தள்ளிவிடுகிறார். அவர் அணிந்திருக்கும் சேலையை கிழக்க முயற்சிக்கிறார். பின்னர், மற்றவர்கள் சேர்ந்து அந்த பெண்ணை பிரம்பை கொண்டு தாக்குகின்றனர்.


முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், பின்னர், உயர் சிகிச்சைக்காக மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி வெங்கடேஷ் என்பவரும் அவரது மனைவியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி மற்றும் கணவர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பாண்டி வெங்கடேசனிடம் அந்த பெண் கடன் வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. வாங்கிய பணத்திற்கு பதிலாக பாண்டி வெங்கடேசனிடன் பண்ணையில் பாதிக்கப்பட்ட பெண் வேலை செய்ய இருந்தார். ஆனால், வேலை செய்ய தொடங்கிய சில நாளிலேயே தனது சகோதரியுடன் அந்த பெண்ணுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பணியில் இருந்து அந்த பெண் விலகியுள்ளார்.


ஆத்திரமடைந்த வெங்கடேசன் அவரை தேடி கண்டுபிடித்து மீண்டும் தனது வயலுக்கு இழுத்துச் சென்றுள்ளார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணை சந்தித்த தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா, "அவரின் அனைத்து செலவுகளை காங்கிரஸ் அரசு ஏற்கும்" என உறுதி அளித்தார்.