கருக்கலைப்பு விவகாரத்தில் முடிவு எடுக்கும் உரிமை பெண்களுக்கே இருப்பதாக உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. குறிப்பாக, திருமணமாகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ளும் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.
கருக்கலைப்பு செய்ய திருமணமாகாத பெண்களுக்கு உரிமை உள்ளதா?
பெண்களின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக இம்மாதிரியான தீர்ப்புகள் வழங்கப்பட்டு வரும் சூழலில், மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை வழங்கிய ஒரு தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருக்கலைப்பு செய்து கொள்ள பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு அனுமதி மறுத்துள்ளது மும்பை உயர் நீதிமன்றம்.
குழந்தை உயிருடன் பிறப்பதற்கும், உடல் நல குறைபாடு ஏற்படுவதற்கும் வாய்ப்பிருப்பதை காரணம் காட்டி நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மீதமுள்ள 12 வாரங்களுக்கும் கர்ப்பத்தை கலைக்காமல் அரசு காப்பகத்தில் குழந்தையை பெற்றெடுக்க நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:
ஜல்கானில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க கோரி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் அந்த சிறுமி. இந்த கட்டத்தில் கருக்கலைப்பு செய்வது பாதுகாப்பா? இல்லையா? என்பதை கண்டறியவும் குழந்தைக்கு இதயத்துடிப்பு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவும் நீதிமன்றம், மருத்துவ குழுவை அமைத்தது.
குழந்தை உயிருடன் பிறக்கும் என்றும், பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட வேண்டும் என்றும், மேலும் அறுவை சிகிச்சை அவசியம் என்றும் மருத்துவ குழு கருத்து தெரிவித்தது. அதேபோல, மாற்று ரத்தம் தேவைப்படும் மற்றும் சிறுமி ஐசியுவில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் குழு தெரிவித்தது.
இதனால், சிறுமிக்கு உடல் நலகுறைபாடு ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பாலியல் வன்கொடுமையால் சிறுமி கர்ப்பமானதால், அதை கலைக்க வேண்டும் என்பதில் சிறுமியின் தாயார் உறுதியுடன் இருந்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்த ரவீந்திர குகே, ஒய்.ஜி கோப்ரகடே ஆகியோர் கொண்ட அமர்வு, "குழந்தையின் மன மற்றும் உடல் வளர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டும். ராஜஸ்தானில் அந்த சிறுமி ஒரு நபருடன் சில வாரங்களுக்கு வசித்து வந்துள்ளார். இது, காதல் உறவாக தோன்றுகிறது.
இருப்பினும், அவர் மைனர் என்பதால், அவரது சம்மதம் அர்த்தமற்றது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான விதிகளின் கீழ் அந்த ஆண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல, சிறுமியை பரிசோதித்ததில் கரு சரியான இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுமியின் தாயார் கோரிக்கை ஏற்கப்பட்டாலும் குழந்தை குறைபாடுடன் பிறக்க வாய்ப்பிறக்கிறது. எனவே, கருகலைப்பு செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது" என தெரிவித்தது.