பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் சல்மான் கான். மும்பையில் தெருக்களில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சல்மானை கானை பத்திரிகையாளர் அசோக் பாண்டே வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்காக, சல்மான் கானும் அவரது பாதுகாவலர் நவாஸ் ஷேக்கும் ஆகியோர் சேர்ந்து அசோக் பாண்டேவை மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
தன்னை மிரட்டி, தாக்கியதாக சல்மான் கான் மற்றும் அவரது பாதுகாவலருக்கு எதிராக பத்திரிகையாளர் அசோக் பாண்டே புகார் அளித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இந்த வழக்கில், சல்மான் மற்றும் அவரது பாதுகாவலர் நவாஸ் ஷேக் ஆகியோருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஏப்ரல் 5ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தது மாஜிஸ்திரேட் நீதிமன்றம். இந்த உத்தரவுக்கு எதிராக சல்மான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சல்மான் கான் தாக்கல் செய்த மனுவில், "சம்பவத்தின் போது பாண்டேவிடம் எதுவும் கூறவில்லை" என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி டாங்க்ரே, மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து நீதிபதி டாங்க்ரே கூறுகையில், "மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மன் அனுப்பும் முன் நடைமுறை ஆணையை பின்பற்ற தவறிவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் நன்கு அறியப்பட்ட பிரபலம் என்பதற்காக நீதித்துறை செயல்முறை தேவையற்ற துன்புறுத்தலுக்கான வழிமுறையாக இருக்க வேண்டியதில்லை.
சட்ட நடைமுறைகளை கடைபிடிக்காமல், புகார்தாரர் அளித்த புகாரின் அடிப்படையில் தேவையற்ற அடக்குமுறைக்கு உட்படுத்த கூடாது. சினிமா நட்சத்திரத்தால் அவமதிக்கப்பட்டதாக கருதி தனது பழிவாங்கலைத் திருப்திப்படுத்த நீதி இயந்திரத்தை இயக்கி உள்ளார்.
விண்ணப்பதாரர்களுக்கு (சல்மான் கான் மற்றும் ஷேக்) எதிராக சம்மன் அனுப்புவதும் வழக்குத் தொடருவதும் துஷ்பிரயோகத்திற்கு குறைவானது அல்ல. நீதியை வழங்குவதற்காக, மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வது பொருத்தமானது என்று கருதுகிறேன்" என்றார்.