நாடு முழுவதும் வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி வட இந்தியாவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, மகாராஷ்ட்டிரா தலைநகர் மும்பையில் கோலாகலமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பை முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தரைவழியிலும், கடல் வழியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.


மும்பையின் அருகே அலிபாக்கில் ஸ்ரீவர்தன் கடற்கரை அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த கடற்கரையில் நேற்று படகு ஒன்று கரை ஒதுங்கியது. ஆள் நடமாட்டமே இல்லாமல் அந்த படகு கரை ஒதுங்கியதால் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த படகை கண்டவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற போலீசார் கரை ஒதுங்கிய படகை கரைக்கு கொண்டு வந்தனர்.




பின்னர், மும்பை போலீசார் படகை பரிசோதனை செய்தனர். அப்போது, படகில் ஏகே 47 துப்பாக்கிகள் 3 மற்றும் தோட்டாக்கள் இருந்தன. இதைக்கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அந்த இடத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கரை ஒதுங்கிய படகு இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது என்று கண்டுபிடித்தனர்.


இந்த படகு ஓமன் நாட்டில் இருந்து ஐரோப்பியா சென்று கொண்டிருந்தபோது கடந்த ஜூன் மாதம் மஸ்கட்டில் பழுதாகியுள்ளது. அப்போது, படகில் இருந்தவர்கள் கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். ஆனால், படகை அவர்கள் மீட்கவில்லை. இதையடுத்து, படகும் கடலிலே மாயமானது. மேலும், படகில் இருந்த ஆவணங்கள், துப்பாக்கிகளின் வரிசை எண்கள் இவற்றை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.




போலீசார் அந்த துப்பாக்கிகளின் விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு விசாரித்ததில் அந்த துப்பாக்கிகள் தங்களிடம் இருந்து மாயமானவை என்று அதன் விற்பனையாளர்கள் தகவல் அளித்தனர். இதனால், போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விநாயகர் சதுர்த்திக்காக மும்பை மாநகரம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம படகு கரை ஒதுங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த மகாராஷ்ட்ரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “ மும்பை அருகே சிக்கியுள்ள படகு ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணுக்கு சொந்தமானது ஆகும். அந்த பெண்ணின் கணவர் கப்பல் கேப்டனாக உள்ளார். இது பயங்கரவாத செயலாக தெரியவில்லை. தற்போது, எதையும் உறுதியாக கூற முடியாது. பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், மும்பை போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.” இவ்வாறு அவர் கூறினார். பயங்கர ஆயுதங்களுடன் வெளிநாட்டு படகு ஒதுங்கியதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பன்மடங்கு அதிகரித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மும்பை கடல் மார்க்கம் வழியாக சட்டவிரோத சம்பவங்கள், தீவிரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.