குஜராத் மாநிலம் வதோதராவில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் 27 மாணவர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாவுக்காக மாணவர்கள் படகில் சென்றுள்ளனர். அப்போதுதான், இந்த விபத்து நடந்துள்ளது. இதில் சிக்கி 14 மாணவர்கள் 2 ஆசிரியர்கள் என 16 பேர் உயிரிழந்தனர்.
மனதை பதற வைத்த குஜராத் விபத்து:
விபத்தில் சிக்கிய மாணவர்கள், நியூ சன்ரைஸ் பள்ளியில் படித்து வந்துள்ளனர். மாணவர்களை ஹர்னி ஏரிக்கு சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ளது பள்ளி நிர்வாகம். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "சம்பவம் நடந்த ஹர்னி ஏரியில் மீதமுள்ள மாணவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.
இதுகுறித்து குஜராத் கல்வித்துறை அமைச்சர் குபேர் திண்டோர் பேசுகையில், "பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு ஏரியில் கவிழ்ந்ததில் குழந்தைகள் இறந்ததாக இப்போதுதான் அறிந்தேன். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையும் (NDRF) தீயணைப்புப் படை வீரர்களும் மற்ற அரசு அமைப்புகளுடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளது" என்றார்.
இதையும் படிக்க: Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!
விபத்து குறித்து பேசிய வதோதரா மாவட்ட ஆட்சியர் ஏ.பி. கோர் கூறுகையில், "படகில் 27 குழந்தைகள் இருந்தனர். நாங்கள் மற்றவர்களைக் கண்டுபிடித்து மீட்க முயற்சித்து வருகிறோம்" என்றார்.
குஜராத்தில் தொடர் கதையாகும் சோக நிகழ்வுகள்:
குஜராத்தில் இதுபோன்று விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு, அக்டோபர் 30ஆம் தேதி, மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்த போது எதிர்பாராமல் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்தப் பால விபத்து தொடர்பாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மோர்பி பாலத்தை பராமரித்து வந்ததில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குஜராத்தில் கடந்த 26 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. குறிப்பாக, தற்போது பிரதமராக உள்ள மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக 4 முறை பதவி வகித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில், குஜராத்தில் தொடர்ந்து வரும் விபத்துகள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையும் படிக்க: விமான ஓடுதளத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட பயணிகள்! இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்!