பிரதமரின் மீன் வள மேம்பாட்டுத் திட்டம் (PMMSY) என்பது மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் மீன்வளத் துறை மற்றும் மீனவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். மீன் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன், தரம், தொழில்நுட்பம், அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு மேலாண்மை ஆகியவற்றில் முக்கியமான இடைவெளிகளை

  சரி செய்வதையும், மதிப்புத் தொடரை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. வலுவான மீன்வள மேலாண்மை கட்டமைப்பை உருவாக்கவும், மீனவர்களின் நலனை மேம்படுத்தவும் இது முயற்சிக்கிறது.


நீலப்புரட்சித் திட்டம்:


ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் மேலாண்மை மீன்வளத் திட்டம் அல்லது நீலப்புரட்சித் திட்டம் 2015-16 நிதியாண்டில் ரூ.3000 கோடி, மத்திய முதலீட்டில் 5 ஆண்டுகளுக்கு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் முதன்மையாக மீன் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியது. 


மேலும், மத்திய துறை துணைத் திட்டமான பிரதமரின்  மீன்வளர்ப்போர் நலத்திட்டம், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தொடங்கப்பட்டது. அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 2023-24 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் ரூ .6,000 கோடிக்கு மேல் முதலீட்டுடன் மீன்வளத் துறையை முறைப்படுத்துவதையும், மீன்வளம், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


பிரதமரின்  மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் 4 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், இந்தியாவின் மீன்வளத் துறையை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட பல முக்கிய முன்முயற்சிகளை வெளியிட்டார்.


4 ஆண்டுகள் நடந்தது என்ன.?


மீன்வள தொகுப்பு மேம்பாடு: முத்து வளர்ப்பு, அலங்கார மீன்பிடித்தல் மற்றும் கடற்பாசி வளர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மீன்வள தொகுப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொகுப்புகளுக்கான விதிமுறைகளை அறிவித்தது. மூன்று சிறப்பு கிளஸ்டர்கள் நிறுவப்பட்டன.


பருவநிலை பாதிப்பினை தாங்கும் கடலோர மீனவ கிராமங்கள்: ரூ.200 கோடி ஒதுக்கீட்டில் 100 கடலோர கிராமங்களை, பருவநிலை பாதிப்பிற்கு உகந்த கடலோர மீனவ கிராமங்களாக மேம்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.


ட்ரோன் தொழில்நுட்ப முன்னோடி: மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் நடத்தவுள்ள, மீன் போக்குவரத்துக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த ஒரு முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டது.


ஆராய்ச்சி மற்றும் இனப்பெருக்க மையங்கள்: கடற்பாசி வளர்ப்பிற்கான ஒப்புயர்வு மையமாக மண்டபம் மண்டல மையத்தை அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. புவனேஸ்வரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்-மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு நிறுவனம், மண்டபத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை முறையே நன்னீர் மற்றும் கடல் உயிரினங்களுக்கான ஒருங்கிணைப்பு நிறுவனங்களாக நியமிக்கப்பட்டுள்ளன.


மீன்வள ஸ்டார்ட்-அப்கள்: 100 மீன்வள ஸ்டார்ட் அப்கள், கூட்டுறவுகள், எஃப்.பி.ஓக்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்க 3 அடைகாக்கும் மையங்களை நிறுவுவதாக அரசு அறிவித்தது.


உள்நாட்டு மீன் இனங்களை ஊக்குவித்தல்: உள்நாட்டு மீன் இனங்களை ஊக்குவித்தல் மற்றும் மாநில மீன் பாதுகாப்பு குறித்த கையேடுகள் வெளியிடப்பட்டன. 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 22 அரசுகள் தங்கள் மாநில மீன்களை ஏற்றுக்கொண்டுள்ளன அல்லது அறிவித்துள்ளன.


முன்னுரிமை திட்டங்கள்: கீழ்க்கண்ட திட்டங்களுக்கு ரூ.721.63 கோடி ஒதுக்கப்பட்டது:


அசாம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், திரிபுரா மற்றும் நாகாலாந்தில் ஐந்து ஒருங்கிணைந்த நீர்வாழ் பூங்காக்களை உருவாக்குதல்.


அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் உலகத்தரம் வாய்ந்த மீன் சந்தைகள்.


குஜராத், புதுச்சேரி மற்றும் டாமன் & டையூவில் ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகங்கள்.


பல மாநிலங்களில் உவர் பகுதி மீன்வளர்ப்பு மற்றும் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்புக்கு 800 ஹெக்டேர்.


கப்பல் தகவல் தொடர்பு அமைப்பு: மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பை உறுதி செய்வதற்காக 1 லட்சம் டிரான்ஸ்பாண்டர்களுடன் கப்பல் தகவல் தொடர்பு மற்றும் ஆதரவு அமைப்பு தொடங்கப்பட்டது.


இந்த முயற்சிகள் "வளர்ச்சியடைந்த இந்தியா 2047" என்ற பார்வைக்கு ஏற்ப, வாழ்வாதார வாய்ப்புகள், நிலைத்தன்மை, இந்தியாவின் நீல பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.