Delhi Redfort Blast: வெடிமருந்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது, எதிர்பாராதவிதமாக வெடித்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Continues below advertisement


டெல்லி கார் வெடிப்பு:


தலைநகர் டெல்லியில் நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு மிக்க ஒரு இடத்தில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. இந்நிலையில் உளவுத்துறை தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, சந்தேகிக்கப்படும் நபர்கள் அச்சம் கொண்டிருக்கலாம் எனவும், இதனால் வெடிபொருட்களை கொண்டு செல்லும் போது ஏதேனும் தவறு நேர்ந்து வெடித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


கடந்த திங்கட்கிழமை நாடு முழுவதும் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டு பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 2,900 கிலோ ரசாயனம் மீட்கப்பட்டது ஆகியவை சந்தேக நபர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், இதனால் கார் வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் வேறு இடத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.



தற்கொலைப்படை தாக்குதல் அல்ல?


வெளியாகியுள்ள தகவல்கள் வழக்கு விசாரணையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். காரணம், ஆரம்பத்தில் இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என்ற கோணத்திலேயே விசாரணை முடுக்கிவிடப்பட்டது. ஆனால், இந்த தகவல்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வெடிபொருட்களை கொண்டு செல்லும்போது எதிர்பாராமல் வெடித்த சம்பவமாக வழக்கை மாற்றுகிறது என்று புலனாய்வுத்துறை தரப்பினர் குறிப்பிடுகின்றனர். சந்தேகிக்கப்படும் நபர் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தை (IED) தவறான முறையில் ஒன்று சேர்த்ததாகவும்,  இதன் காரணமாக வெடிபொருள் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.


பெரும் சேதம் இல்லாதது ஏன்?


குண்டு வெடித்தால் ஏற்படக்கூடிய குழி இல்லாததும், எரிபொருட்கள் ஏதும் இல்லாததும், வாகனத்தில் வெடிபொருளை கொண்டு செல்லும்போது தற்செயலாக நடந்த வெடிப்பாகவே இந்த சம்பவத்தை உணர்த்துகிறது. சந்தேக நபர்கள் பீதியில் இருந்ததால் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில் IED-ஐ ஆயுதமாக்க முடியவில்லை என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். i20 கார் வெடித்தபோது போக்குவரத்தில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது வாகனம் இயக்கத்தில் இருந்ததால் IED ஏதாவது பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் தற்செயலான வெடிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. அதன்படி, சந்தேக நபர்கள் வெடிபொருட்களை வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது அகற்றவோ முயன்றபோது வெடிப்பு நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதை நிராகரிக்கமுடியவில்லை.


பரவிய அச்சம்


வெள்ளை நிற ஹூண்டாய் i20 காரை ஓட்டி வந்த முக்கிய சந்தேக நபர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குண்டுவெடிப்பு நடந்த நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அவர் தனது தொலைபேசியை அணைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார், அவரது குடும்பத்தினருடனான தொடர்புகளையும் கூட துண்டித்துவிட்டார். திங்கட்கிழமைக்கு முன்பு கைது செய்யப்பட்டவர்கள் உட்பட மற்ற சந்தேக நபர்களும் மருத்துவர்கள் ஆவர்.  மருத்துவர்கள் எளிதில் சந்தேகத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்பதால், அவர்களின் உண்மையான செயல்பாடுகளை மறைக்க அதனை ஒரு முகமூடியாக பயன்படுத்தியுள்ளனர்.