விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ( (Indian National Congress))இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.


நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் ஜந்தன் மந்தர் பகுதியை தவிர மற்ற இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதி அளிக்கவில்லை. 






காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், காலை 10 மணியளவில் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவகத்திற்கு வந்தார். பிரியங்கா காந்தியும் போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவகத்திற்கு வந்தடைந்தார். 


விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இருந்து கட்சி உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்தும், கைகளில் கருப்பு நிற பேண்டுகள் அணிந்தும், நாடாளுமன்ற வளாகம் வழியாக குடியரசுத் தலைவர் மாளிகை வரை பேரணியாக செல்ல உள்ளனர். இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் உள்பட பலரும் பங்கேற்கின்றனர். 


மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே (Mallikarjun kharge) கருப்பு நிற டர்பன், குர்தா அணிந்து போராட்டத்தில் பங்கேற்றார். 






டெல்லி முழுவதும் போக்குவரது மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ், மக்கள் தங்களது பயணத்தை கவனத்துடன் மேற்க்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது. காங்கிரஸ் போராட்டம் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்றும் மக்களை எச்சரித்துள்ளனர். 


புது டெல்லியின் Lutyens பகுதி அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்து இருக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 



புதுடெல்லியில் மழை பெய்து வரும் நிலையிலும், காங்கிரஸ் கட்சியினர் கொட்டும் மழையிலும் போராடி வருகின்றனர்.


இந்த நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராகுல்காந்திசெய்தியாளர்களைச் சந்தித்தார்.


அப்போது, அவர் கூறியதாவது, “ இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஜனநாயகம் மரணித்து வருகிறது. சர்வாதிகாரம் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.  


சர்வாதிகாரத்திற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். நாட்டின் நிதியமைச்சருக்கு இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. இல்லையென்றால், நமக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. நிதியமைச்சர் அவருக்கு என்ன சொல்லப்படுகிறதோ அதை மட்டும் செய்பவராக இருக்கிறார்.






புதுடெல்லி ஜன்தர் மந்தர் தவிர மற்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி காவல்துறை.  காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவகம், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலை மற்றும் அதை சுற்றி 7 கி.மீ. வரை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் அலுலவகம், குடியரசுத் தலைவர் அலுவலகம், அவர்களின் குடியிருப்பு மற்றும் முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 






காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும்  கட்சியினர்,  குடியரசுத் தலைவர் அலுவலகம் நோக்கிய பேரணி தொடங்கியது. டெல்லி நகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈட்டுபட்டுள்ளனர்.