வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கு வட்டி விகிதம் 0.50 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டின் சந்தைகள் நிலையற்றத் தன்மையில் உள்ளதாகவும், பிற நாடுகளின் பொருளாதாரங்களை விட இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது எனினும் பண வீக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.
0.50 விழுக்காடு அதிகரிப்பு
முன்னதாக ரெப்போ வட்டி விகிதம் 0.75 விகிதம் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 0.5 விழுக்காடு உயர்த்தப்பட்டு 4.9 விழுக்காட்டில் இருந்து 5.40 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த வட்டி விகித உயர்வால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன் ஆகியவற்றின் வட்டி விகிதங்களை வணிக வங்கிகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு கொரொனா காலத்தில் ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் உள்ள சிக்கல்களைக் களைய வட்டிவிகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில், அவை 2021ஆம் ஆண்டிலும் தொடர்ந்தன. இதனால் நாட்டில் பண வீக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் தற்போது இந்த ரெப்போ வட்டி விகித உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம்
ரிசர்வ் வங்கி நாட்டின் வணிக வங்கிகளுக்கு கொடுக்கும் வட்டி விழுக்காடே ரெப்போ வட்டி விகிதம் எனப்படுகிறது.
ரிசர் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்தால் வங்கிகளும் அதன் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடன்களின் வட்டியை அதிகரிக்கும். ரெப்போ வட்டி விகிதம் பொது மக்கள் வங்கிகளின் வாங்கும் கடன்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் பொருளாதாரத்தில் பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்