நாட்டின் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக நாடு முழுவதும் இன்று காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது, “
“ ஜனநாயகத்தின் மரணத்தை இந்தியா காண்கிறது. இந்தியா உங்கள் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம் என்ற யோசனைக்கு எதிராக நிற்பவர்கள் யாராக இருந்தாலும் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள்.
இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ்.ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்களை யாராவது கேள்வி கேட்டால் அரசு அவர்கள் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. கைது மிரட்டல் விடுக்கிறது.
மக்களின் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, சமூகத்தில் கலவரம் பற்றி எல்லாம் அவர்கள் பேசவில்லை. அரசாங்கத்தின் அஜெண்டா 4-5 நபர்களை பாதுகாப்பதில் மட்டுமே ஆர்வமாக உள்ளது. இந்த சர்வாதிகாரம் 2-3 பெரும் வணிகர்களின் நலனுக்காக 2 நபர்களால் நடத்தப்படுகிறது. மக்களின் பிரச்சினைகளுக்காக நான் எப்போதும் நிற்பேன்.
என்னுடைய அரசியல் எதிரிகள் என்னைத் தாக்கும்போது நான் அதை அனுபவிக்கிறேன். ஒவ்வொரு அரசியல் தாக்குதலும் போர்க்களம். எதற்காக போராடுகிறேன் என்பதை கற்றுக்கொடுக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் என்னை விசாரித்தபோது என்ன நடந்தது ? என்று கேளுங்கள்.
எனது வேலையே ஆர்.எஸ்.எஸ். கருத்தை எதிர்ப்பதே ஆகும். அதைச் செய்யப்போகிறேன். நான் எவ்வளவு அதிகமாக அதைச் செய்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் தாக்கப்படுவேன். நீங்கள் என்னை தாக்குங்கள். நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்.
இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்குதுனு நிதி அமைச்சருக்கு எந்தப்புரிதலும் இல்லை. அவருக்கு ஜீரோ புரிதல் மட்டுமே உள்ளது. அவர் வெறும் ஊதுகுழல்.”
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்