இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடுகிறது. கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை போன்ற நோய்களும் அச்சுறுத்துகின்றன. 


Mucormycisis என்ற ஒரு வகை பூஞ்சை தொற்றுதான் கறுப்பு பூஞ்சை. இது கொரோனா வைரசால் தூண்டப்படுவதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாள் படுக்கையிலேயே சிகிச்சையில் உள்ளவர்களுக்கு இந்த பூஞ்சை தொற்று ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கொரோனா காரணமாக ஸ்டீராய்டு மருந்து மற்றும் ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளும் சிலரையும் இந்த கருப்பு பூஞ்சை எளிதாக தாக்குவதாக தெரிகிறது.கருப்பு பூஞ்சை என்பது திடீரென உருவான தொற்று அல்ல, அது ஏற்கெனவே கண்டறியப்பட்ட நோய் தான். ஆனால் இப்போது அது திடீரென அதிகமாக பரவக்காரணம் என்ன என மருத்துவத்துறையைச் சேர்ந்த பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.




இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள டாக்டர் அரவிந்த ராஜ், ''கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மிகச்சிறந்த மருந்து ஸ்டீராய்டு. ஆனால், இவை கொரோனா வைரசுக்கு எதிராக போரிடும் அதே நேரத்தில், நமது நோய் எதிர்ப்பையும் குறைக்கும். ஆகவே தான் ஸ்டீராய்டு மற்றும் நீரிழிவு ஒருசேர பெற்றவர்களுக்கு வேறு நோய் தாக்கும் அபாயம் உள்ளது என்பதால் இந்த பூஞ்சை எளிதில் தாக்குகிறது. ஆனால் சந்தேகம் என்னவென்றால்,  ஸ்டீராய்டு வகையறா மருந்துகள் பலகாலமாக மூட்டு சம்மந்தப்பட்ட வியாதிகள், ஆட்டோ இம்யூன் வியாதிகள், புற்றுநோய் ஆகியவற்றில் பரவலாக உபயோகப்படுத்தப்படும் மருந்து.  ஆனால், கொரோனா தொற்றில் மீண்டவர்களுக்கு இது ஏன் தாக்குகிறது என்று உன்னிப்பாக கவனித்தால் 'சுத்தமற்ற ஆக்சிஜன்' பயன்பாடு இந்த பூஞ்சை பரவலுக்கு காரணமோ என கேள்வி எழுகிறது.


மருத்துவ பயன்பாட்டுக்கு உபயோகம் செய்யும் ஆக்சிஜன் 99.5% சுத்தமானது. அதை அப்படியே நோயாளிக்கு அளிக்க மாட்டார்கள். Humidifierஎன்னும் சுத்தமான கருவியில் உள்ள நீரில் அனுப்பப்பட்டு ஆக்சிஜன் நோயாளிக்கு அளிக்கப்படுகிறது. Humidifierல் உள்ள நீர் மிக சுத்தமான 'Sterile Water' ஆகும். ஆனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சாலைகளில் உபயோகிக்கும் ஆக்சிஜனை நோயாளிக்கு அளிக்கும்போது, அந்த Humidifierல் உள்ள நீர் சுத்தமானதாக இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. Humidifier கூட சுத்தமற்றதாக இருக்கலாம். அது பூஞ்சையை ஆக்சிஜனோடு சேர்த்து நோயாளிக்கு அளிக்கிறதோ ?? அதனால் தான் இவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் எளிதில் வருகிறதோ என தோன்றுகிறது. இது எனது சந்தேகமும் அனுமானமும் தான்'' என குறிப்பிட்டுள்ளார்.




எய்ம்ஸ் மருத்துவமனையில் வாத நோய் சிகிச்சைக்கான தலைமை மருத்துவர் உமா குமாரும் இதே சந்தேகத்தை எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், வாத நோய்க்கு பொதுவாக ஸ்டீராய்டு மருந்துகள் தான் வழக்கமாக கொடுக்கப்படும். அப்போதெல்லாம் இப்படி கருப்பு பூஞ்சை பரவவில்லையே? நோயெதிர்ப்பு சக்தியை கொரோனா கடுமையாக குறைத்து பூஞ்சை நோயை வரவழைக்கிறதா? அல்லது தொழிற்சாலை ஆக்சிஜன் காரணமா என்பது தான் சந்தேகமாக உள்ளது என்றார்.




மூக்கு அடைப்பு, கண்கள் அல்லது கன்னங்களில் வீக்கம் போன்றவை இந்த பூஞ்சை தொற்றில் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதனை கவனிக்காமல் விட்டால் 15 நாட்களில் மூளையைத் தாக்கி இறப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரொனா பாதித்து குணமடைந்தவர்களுக்கு இதுபோல அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உடலில் உள்ள திசுக்களை பரிசோதித்து பூஞ்சை தொற்றுக்கு எதிரான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.