BJPNEC2023: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்ட கண்காட்சியில் அயோத்தி ராமர் கோவில் இடம் பெற்றதால் பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம், நேற்று டெல்லியில் தொடங்கியது. இந்த செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் புதுடெல்லி மாநகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில், பாரதிய ஜனதா கட்சியின் சாதனைகளான கொரோனா கால நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டது உள்ளிட்ட மிக முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் மிக முக்கியமாக 6 முக்கிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கருதப்படுவது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம், மகாகாளிஸ்வர் ஆலயம் புத்துயிரூட்டப்படல், காசி விஸ்வநாதர் ஆலயம் புதுப்பிப்பு தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா உலகின் 'விஷ்வ குரு' வாக உருவாகி வருவதாக காட்டும் காட்சிகளும் கண்காட்சியில் முக்கிய இடம் பிடித்துள்ளன. இது பாரதிய ஜனதா கட்சியினரிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக, இந்தியாவை வலுவான நாடாக ஆக்குவதற்கான மத்திய பாரதிய ஜனதா அரசின் செயல் திட்டங்கள், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தி நாட்டை மீட்டு பெருந்தொற்றுக்கு எதிராக பெற்ற வெற்றி தொடர்பான காட்சிகளும் கண்காட்சியில் இடம் பெற்று பாரதிய ஜனதா கட்சியினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பாஜக செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன், “காசி விஸ்வநாதர் வழித்தடத்தை சீர் செய்தல் மற்றும் உஜ்ஜயினியின் மஹாகல் கோவிலை மறுவடிவமைப்பு செய்தல் ஆகியவற்றின் மூலம் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வலுப்படுத்துவதில் பிரதமரின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. மேலும், ஒரு பூமி, ஒரு குடும்பம் மற்றும் ஒரு எதிர்காலம் என்ற இந்தியாவின் தலைவரை G20 உலகளவில் ஏற்றுக்கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. இந்த கவுன்சில் தவிர, ஐநா சீர்திருத்தங்களில் பிரதமரின் முன்முயற்சிக்கு நன்றி” என குறிப்பிட்டு பேசினார்.