பா.ஜ.க. தொண்டர்களுக்கு ப்ளையிங் கிஸ்! யாத்திரையில் ராகுல் காந்தி செய்த சம்பவம் - ம.பி.யில் ருசிகரம்

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையின்போது ராகுல் காந்தி பா.ஜ.க. தொண்டர்களிடம் பேசி அவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி பயணம், நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேச மாநிலங்களை தொடர்ந்து மத்திய பிரதேசத்தை அடைந்துள்ளது.

Continues below advertisement

இன்னும் ஒரு சில நாள்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் அக்கட்சிக்கு சவால் விடும் வகையில் ராகுல் காந்தி யாத்திரைக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.  

களைகட்டும் ராகுல் காந்தி யாத்திரை:

இந்த நிலையில், ஷாஜாபூர் நகரை நோக்கி யாத்திரை வாகனம் சென்றபோது, பாஜக கவுன்சிலர் முகேஷ் துபே தலைமையில் அங்கு குவிந்த பாஜக தொண்டர்கள், ராகுல் காந்தியை பார்த்து 'மோடி மோடி' என்றும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்றும் கோஷம் எழுப்பினர். கோஷம் எழுப்பிய பாஜக தொண்டர்களுடன் பேசுவதற்காக வாகனத்தை நிறுத்திய ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

சிறிய உரையாடலுக்கு பிறகு, கைகுலுக்குவிட்டு வாகனத்தில் தனது பயணத்தை தொடர்ந்தார். போவதற்கு முன்பு, பாஜக தொண்டர்களை பார்த்து ப்ளையிங் கிஸ் கொடுத்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ராகுல் காந்தியிடம் பேசியது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பாஜக கவுன்சிலர் முகேஷ் துபே, "காங்கிரஸ் தலைவரை வரவேற்று உருளைக்கிழங்கு வழங்கினேன். நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள் என்று அவரிடமே கூறினேன்" என்றார்.

பாஜகவினருக்கு ராகுல் காந்தி கொடுத்த சர்ப்ரைஸ்:

அதற்கு உருளைக்கிழங்கை கொடுத்தீர்கள் என கேட்டதற்கு, "உருளைக்கிழங்குகளை தங்கமாக மாற்றுவேன் என ராகுல் காந்தி பழைய வீடியோ ஒன்றில் பேசினார்" என பாஜகவினர் கூறினர். ஆனால், அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும் பாஜகவை விமர்சிக்கும் விதமாக ராகுல் காந்தி அப்படி பேசியதாகவும் உண்மையை கண்டறியும் இணையதளங்களம் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இரண்டாவது யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியதில் இருந்து தொடர் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் யாத்திரையின்போது கோயிலுக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விதிகளை மீறி செயல்பட்டதாக மக்களை தூண்டியதாகவும் அவர் மீது அஸ்ஸாம் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பின்னர், அஸ்ஸாம் மாநிலத்திலும் மேற்குவங்கத்திலும் அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என தொடர் சர்ச்சை வெடித்து வருகிறது.

 

Continues below advertisement