BJP worker: பெங்களூருவில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது.
கார் கதவால் விபத்து:
திங்கட்கிழமை பிற்பகலில் கே.ஆர்.புரம் பகுதியில், பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஷோபா கரந்த்லாஜே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரது காரின் ஓட்டுனர் எதிர்பாராத விதமாக தனது வாகனத்தின் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது பின்புறமாக ஒரு ஸ்கூட்டியில் வந்த பாஜக தொண்டர், காரின் கதவின் மீது மோதி நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அடுத்த நொடி அந்த வழியாக வந்த பேருந்து அவர் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் பெயர் பிரகாஷ் மற்றும் வயது 63 என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்குப்பதிவு:
IPC பிரிவு 304 (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 283 (பொது வழியில் அல்லது வழிசெலுத்தல் வரிசையில் ஆபத்து அல்லது இடையூறு) ஆகியவற்றின் கீழ் கார் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஷோபா கரந்த்லாஜே போட்டியிடுகிறார். இதையடுத்து அப்பகுதியில் நடந்த பேரணியில் பரப்புரை செய்து கொண்டிருந்த போது விபத்து நேர்ந்துள்ளது. ஆனால், அந்த நேரத்தில் அமைச்சர் அந்த காரில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விளக்கம்:
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷோபா கரந்த்லாஜே, "எங்கள் தொண்டர் பிரகாஷ் விபத்தில் சிக்கினார். நான் பேரணிக்கு முன்புறம் சென்றிருந்தேன். சாலையின் முடிவில் கார் நின்றது. அப்போது அவர் வந்து கார் மீது மோதி கீழே விழுந்தார். அதைத் தொடர்ந்து, அவர் மீது பேருந்து மோதியது. பிரகாஷின் பிரேதப் பரிசோதனை விரைவில் செய்யப்படுவதை உறுதி செய்ய காவல் துறை மற்றும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. நாங்கள் அவரது குடும்பத்தினருடன் இருக்கிறோம், அவர்களுக்குத் தேவையான இழப்பீட்டை வழங்கை நடவடிக்கை எடுப்போம்" என்று கரந்த்லாஜே தெரிவித்தார்.
ஷோபாவும் - சர்ச்சைகளும்:
கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூரில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் திடீரென்று குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பேசிய ஷோபா, “தமிழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கர்நாடகாவுக்கு வந்து எங்கள் ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். கர்நாடகா மீது தாக்குதல் நடத்தும் அவர்கள் மீது கர்நாடகா காங்கிரஸ் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் போடுவோர் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை’’என்றார். இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், தேர்தல் ஆணையமும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.