புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பாஜக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஏஎப்டி மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், பாஜக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களில் நாம் வெற்றி பெற வேண்டும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக இருக்கின்றோம். பாமகவை பொறுத்தவரையில் தமிழகத்தில் கூட்டணியில் இருந்து தனியாக வெளியே வந்துள்ளனர். ஆனால் புதுச்சேரியில் இன்னும் அவர்கள் முடிவை அறிவிக்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் 8, 9 வார்டுகள் என்ற முறையில் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நமது கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எந்த வார்டில், எந்த பதவிக்கு போட்டியிட விரும்புகின்றனரோ அவர்கள் கட்சியின் தலைமை அறிவித்துள்ளதுபோல குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விருப்ப மனுக்களை கொடுக்க வேண்டும்.




விருப்ப மனு கொடுக்கும் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியுமா? என்றால் முடியாது. கூட்டணி கட்சியோடு அமர்ந்துபேசி, நமக்கான தொகுதிகளை பங்கீடு செய்து, எந்தந்த இடங்களில், பதவிகளில் யார்? யார்? போட்டியிட போகிறோம் என்பதை நமது தலைமை முடிவு செய்து அறிவிக்கும். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் நமது கட்சி வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் சந்திப்பதற்கு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் வெற்றி முக்கியமானதாக இருக்கும். புதுச்சேரி மாநில அரசுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. ஜிஎஸ்டி தொகை 330 கோடி, புதிய சட்ட பேரவை கட்ட தொகை என தேவையான நிதியுதவியும் அளித்து வருகிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சியில் இருக்கும் போதும் போராட்டம் செய்துகொண்டிருந்தார். ஆட்சி இல்லாத இப்பொழுதும் அதே போராட்டங்களை செய்து கொண்டிருக்கிறார்.


நம்முடைய ஆட்சி அமைந்து 4 மாதங்களில் பங்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்கள் சென்றடைய சாதி, மதம், இனம், மொழி என்று பாராமல் அனைத்து தரப்பு மக்களும், அனைத்து வசதிகளையும் பெற வேண்டும் என்பது தான் மத்திய அரசின் எண்ணம். அதுதான் மாநில அரசின் எண்ணம். இந்த எண்ணங்களை, திட்டங்களை மக்கள் இடத்தில் கொண்டு சேர்த்து தேர்தலில் பிரகாசமான வெற்றியை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.




பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசுகையில், புதுச்சேரி மாநிலம் காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்தது. ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சி இருக்கும் இடத்தை தேடி பார்க்க வேண்டிய நிலை உள்ளது. காங்கிரஸ் அரசு தனது அதிகாரத்தையும், நிதியையும் பகிர்ந்து அளிக்க விரும்பதில்லை. அதனால் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் தடுத்து வந்தனர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. ஆனால் புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம் என வாக்குறுதி அளித்தோம். அதன்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவினர் கடின உழைப்பால் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உருவாகி உள்ளனர்.


சட்டப்பேரவை, எம்.பி. தேர்தலில் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் நம்மால் சுலபமாக வெற்றி பெற முடியாது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செல்வாக்கு தான் வெற்றி, தோல்வியை முடிவு செய்யும். எனவே உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை சரியாக தேர்வு செய்து நிறுத்த வேண்டும். புதுச்சேரியில் பாஜக சார்பில் உள்ளாட்சி தேர்தல் 276 தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணியை உடனே தொடங்க வேண்டும். இந்த தேர்தலிலும் பெரும்பாலான இடங்களிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.