புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் இடங்களை பகிர்ந்து கொள்வதில் காங்கிரஸ், திமுக இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியிலும் இடங்களை பங்கிட்டு கொள்வதில் கடும் போட்டி நிலவுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் சுதந்திரத்திற்கு பிறகு தற்போது மூன்றாவது முறையாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக கடந்த 1968 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. பின்னர் இறுதியாக 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி வரும் அக்டோபர் மாத ல்21, 25, 28ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


என்.ஆர்.காங்கிரசுடன் பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்று அந்த கட்சியின் மேலிட பொறுப்பாளரான நிர்மல்குமார் சுரானா அறிவித்துள்ளார். இந்த கூட்டணியில் அதிமுகவும் இடம்பெறுகிறது. அந்த கட்சி சார்பில் கூட்டணி இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதே நேரத்தில் தி.மு.க.வும் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது. தற்போது சட்டமன்றத்தில் 6 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் கூட்டணியில் முக்கிய நகராட்சிகளை கைப்பற்ற தி.மு.க. திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகராட்சிகளில் போட்டியிடுவது என முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறது. புதுச்சேரி நகராட்சி பகுதியில் தி.மு.க.வுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கணிசமான வாக்குகள் உள்ளதால் நகராட்சி தலைவர் பதவியை எளிதாக பிடித்துவிடலாம் என்று தி.மு.க. கணக்கு போடுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. இந்த நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.



இருந்த போதிலும் இருகட்சிகள் சார்பிலும் இடஒதுக்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை. அதற்காக குழுவும் அமைக்கப்படாத நிலையே இருந்து வருகிறது. இதுகுறித்து இருகட்சிகளும் மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் உள்ளூர் தலைவர்கள் மட்டத்திலேயே பேசி முடிவெடுக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. ஆனால் அதிக இடங்களில் போட்டியிடுவதால் மட்டுமே தங்களது கட்சியை பலப்படுத்த முடியும் என்று இரு கட்சி தலைவர்களும் கருதுகின்றனர். கூட்டணி அமைத்து போட்டியிட்டால் கட்சியில் முன்னணி பிரமுகர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதால் தனித்தனியாக போட்டியிடலாமா? என்பது குறித்தும் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதால் இங்கேயும் அதே கூட்டணி தொடரவே வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க அ.தி.மு.க. கூட்டணியிலும் புதுச்சேரி நகராட்சியை பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் வெற்றியை ருசிக்க முடியாமல் போன விரக்தியில் இருந்து வரும் அ.தி.மு.க. நகராட்சியையாவது கூட்டணியில் இருந்து பெற்று வெற்றிக்கோட்டை தொடுவதன் மூலம் மீண்டும் தலைதூக்கி விட வேண்டும் என்று கருதுகிறது.



தற்போது பா.ஜ.க.வில் முன்னணி தலைவர்கள் இணைந்துள்ளதால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி தங்கள் கட்சியை பலப்படுத்த பா.ஜ.க. தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே உழவர்கரை தொகுதி தலைவர் பதவியை கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுத்தாலும் கவுன்சிலர் பதவிகளில் தங்கள் கட்சிக்காரர்களை அதிக அளவில் நிறுத்த பா.ஜ.க. முயற்சிக்கலாம் என்றே அந்த கட்சி வட்டாரத்தில் விசாரித்ததில் தெரியவருகிறது. அதுமட்டுமின்றி கிராமப்பகுதிகளை உள்ளடக்கிய கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் அதிக இடங்களில் போட்டியிட்டு தங்களது கட்சிகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க., காங்கிரஸ் தி.மு.க. ஆகிய கூட்டணி கட்சிகளிடையே தற்போதைய நிலவரப்படி கடும் போட்டி இருந்து வருகிறது.