பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவும், நவீன் ஜின்டாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், “ பாஜக எந்த மதத்தையும் இழிவுப்படுத்துவதை கடுமையாக கண்டிக்கிறது. எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தினரையோ இழிவுபடுத்தும் கொள்கைக்கு பாஜக எதிரானதாக இருக்கிறது. அதே போல மற்ற மதத்தினரை இழிவுப்படுத்தும் நபர்களையோ அல்லது தத்துவத்தையோ பாஜக ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை. பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது. இந்தியாவின் ஆயிரக்கணக்கான வருட வரலாற்றில் ஒவ்வொரு மதமும் மலர்ந்து செழித்திருக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.


 






இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே பாஜக செய்தி தொடர்பாளாரக இருந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவும்,   நவீன் ஜின்டாலும் தொடர்ச்சியாக மதங்களை இழிவுப்படுத்தும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக புகார் எழுந்துள்ளது.


முன்னதாக பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இந்தப்புகாரானது பாஜவின் தலைமைக்கும் புகாராக அனுப்பப்பட்டது. இவர் மீது மும்பை காவல்துறை இவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.