Layer shot எனும் பெர்ஃப்யூம் வாசனை திரவிய நிறுவனத்தின் சமீபத்திய விளம்பரங்கள், கூட்டுப் பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வந்தனர்.


நெட்டிசன்களின் கண்டனங்களை அடுத்து இந்த விளம்பரங்களை ட்விட்டர், யூட்யூப் தளங்களில் இருந்து நீக்குமாறு முன்னதாக மத்தியத் தகவம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.


இந்நிலையில் இந்த விளம்பரங்களுக்கு ஃபரான் அக்தர், ரிச்சா சத்தா, ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


”இந்த விளம்பரம் புரியாமல் எடுக்கப்பட்டது அல்ல. ஒரு விளம்பரத்தை உருவாக்கவும் அது குறித்து முடிவெடுக்கவும் ஒரு நிறுவனம்  பல அடுக்குகளில் கூடி முடிவெடுக்கும். விளம்பர ஸ்க்ரிப்ட் தயாரித்தவர்கள், நிறுவனம், விளம்பர படைப்பாளிகள், நடிகர்கள் என அனைவரும் பாலியல் வன்கொடுமையை நகைச்சுவை என நினைக்கிறார்களா?


இந்த விளம்பரத்தை உருவாக்கியவர்களது இந்த அருவறுக்கத்தக்க செயலுக்கு அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும்” என நடிகை ரிச்சா சத்தா பதிவிட்டுள்ளார்.






இந்நிலையில் ரிச்சா சத்தாவின் இந்தப் பதிவில் கமெண்ட் செய்து தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ள பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா, ”இது மிகவும் வேட்கக்கேடாகவும் அருவெறுக்கத்த வகையிலும் உள்ளது.


இந்த விளம்பரம் பல கட்டங்களில் அனுமதி பெற்றே வந்துள்ளது. இது சரி என எத்தனை பேர் நினைத்துள்ளார்கள். இந்த விளம்பரத்தை பலரும் சுட்டிக் காட்டியதும் , தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இதனை நீக்க உத்தரவிட்டதும் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.






இந்நிலையில் இந்த விளம்பரம் குறித்து முன்னதாகப் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர், ”தவறான, இழிவான இந்த விளம்பரம் குறித்து எங்களது கவனத்துக்கு வந்துள்ளது. இந்த விளம்பரத்தை ட்விட்டர், யூடியூப் தளங்களில் இருந்தும் உடனடியாக நீக்குமாறு ஏற்கெனவே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் இது குறித்து அமைச்சகம், ட்விட்டர் மற்றும் யூடியூப்பிற்கு எழுதியுள்ள கடிதங்களில், இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சிலும் (ASCI) அதன் வழிகாட்டுதல்களை இந்த விளம்பரம் மீறுவதாகக் கண்டறிந்துள்ளது எனவும், எனவே விளம்பரத்தை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு இந்திய விளம்பர தர நிர்ணயம் விளம்பரதாரரிடம் கேட்டுக் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.