பல விமர்சனங்களை முன்வைப்பவர் என்று அறியப்படும் சுப்ரமணிய சுவாமி பாஜக தலைமையிலான தேசிய ஜனநயாகக் கூட்டணியை மீண்டும் கடுமையான முறையில் விமர்சித்துள்ளார். சுவாமி தனது ட்விட்டரில், நரேந்திர மோடி அரசுக்கான மதிப்பெண் அட்டை ஒன்றை வெளியிட்டார். அதில், பொருளாதாரம், எல்லையில் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான போர், வெளியுறவுக் கொள்கை, தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு போன்ற பல்வேறு  பிரிவுகளின் கீழ் மதிப்பீடு செய்துள்ளார். 






பொருளாதாரம்                  -  தோல்வி; 


எல்லைப் பாதுகாப்பு         -  தோல்வி;  


வெளியுறவுக் கொள்கை  - ஆப்கானிஸ்தான் படுதோல்வி;


தேசியப் பாதுகாப்பு           - பெகாசஸ் விவகாரம்; 


உள்நாட்டுப் பாதுகாப்பு    - காஷ்மீரில் மனச்சோர்வு. 


பொறுப்பாளி யார் ? 


என்று சூசகமாக வினவியுள்ளார். 






இதற்கு, இந்திரன் என்ற ட்விட்டர் பயனர், " 2014-இல் மட்டுமல்லாமல், பணமதிப்பிழப்புக்குப் பிறகு நடந்த 2019 தேர்தலிலும்  மோடிக்கு ஆதரவாக செயல்பட்டீர்கள். மோடியின் தலைமயின் கீழ் இந்தியா சர்வ வல்லமை கொண்ட நாடாக மாறும். உங்களின் தவறான  கணிப்புக்கு மோடி பொறுப்பேற்க முடியாது" என்று சுப்ரமணிய சுவாமிக்கு கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சுவாமி, " ஆம், மோடியின் செயல்படாததன்மைக்கு நான்தான் பொறுப்பு. அனைத்து வித அதிகாரங்களையும் நான்தான் கொண்டுள்ளேன். மோடியிடம் ஒன்றுமே இல்லை பாருங்கள்" என்று பதிலளித்தார்.       


முன்னதாக, நான்கு நாட்கள் பயணமாக செல்லி சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜியை சுப்ரமணிய சுவாமி சந்தித்தார். 






சுப்ரமணிய சுவாமிக்கும், மம்தா பேனர்ஜிக்கும் இடையிலான அரசியல் நட்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சந்திப்புக்கு பிறகு தனது ட்விட்டரில் , "  மம்தா பேனர்ஜி அரசியல் செயல்பாடுகள் ஜெயப்ரகாஷ் நாராயன், மொராஜி தேசாய், ராஜீவ்காந்தி, சந்திரசேகர் , நரசிம்ம ராவ் ஆகியோரின் ஒப்பிடக்கூடிய அளவில் உள்ளது. மேற்கூறிய தலைவர்களைப் போல் , மம்தா பேனர்ஜியும் செய்வதை சொல்கிறார், சொல்வதை செய்கிறார். இந்திய அரசியலில் இது மிகவும் அரிதானது" என்று பதிவிட்டார்.            






கடந்த 2016-ஆம் ஆண்டு பாஜகவின் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுவாமி. மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் சுப்ரமணிய சுவாமி பல்வேறு கருத்து வேறுபாடுகளையும், மனக்கசப்பையும் கொண்டிருந்தார்.  மிகவும் தீவிர இந்துத்துவா கொள்கை உடைய சுவாமி, வலதுசாரி பொருளாதாரக் கொள்கையைக் கொண்டவர். நுகர்வியத்தில் (Consumerism) அதீத நம்பிக்கைக் கொண்ட இவர், பெட்ரோல்,டீசல் விலையைக் குறைப்பது, வருமான வரியை அடியோடி ஒழித்துக்கட்டுவது போன்ற யோசனைகளை முன்வைத்து வருகிறார். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற விவகாரங்களில் இவரின் கருத்துக்கள் முன்னுக்குப் பன் முரணாகவே இருந்து வருகிறது.