கர்நாடக சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைமை நட்சத்திர தலைவர்களின் பிரச்சார பட்டியலை வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மே 13-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக வெளியிட்டுள்ள நட்சத்திர தலைவர்களின் பிரச்சார பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர்கள் யோகி ஆதித்தியநாத், சிவராஜ் சிங் செளகான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட  பாஜக தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 


கட்சியினர் போர்க்கொடி


கர்நாடக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தலலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பாஜக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.  குறிப்பாக பாஜக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட அவர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஹூப்ளி தார்வாத் மத்திய தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 


பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டி 


தமிழகத்தில் அண்மை காலமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி நீடிப்பதாக உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனிடையே கர்நாடக தேர்தலில் போட்டியிட தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்குமாறு பாஜகவிடம் அதிமுக பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கர்நாடக புலிகேசி நகர் தொகுதியில் டி.அன்பரசன் என்பவர் போட்டியிடுவார் என்று அதிமுக சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது. இதனால் பாஜக அதிமுக கூட்டணி இடையே விரிசலா? தமிழகத்திலும் கூட்டணி முறியுமா என சமூக வலைதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர். 


முதலமைச்சர்களை பின்னுக்கு தள்ளிய அண்ணாமலை


கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பாஜக தலைமை நட்சத்திர தலைவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, ஜே.பி.நட்டா, ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயர் பட்டியலில் 18-வது பெயராக சேர்க்கப்பட்டுள்ளது. அவரின் பெயரை அடுத்து உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் செளகான், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வ சர்மா உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை முன்னாள் பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார். 


காயத்ரி ரகுராம் விமர்சனம்


இது தொடர்பாக பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், பட்டியலில் பாஜக முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்களின் பெயர்களை கீழே தள்ளி கன்னடிகா அப்பா பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கி, தத்தெடுத்த  வாரிசு கன்னடிகா மகனுக்காக அவரது பெயருக்கு பதிலாக மகனின் பெயரை பட்டியலில் மேலே தள்ளி என்ன ஒரு சூப்பர் பாச மலர் தருணம் என பதிவிட்டுள்ளார். மேலும், வாழ்த்துகள் அப்பா, இன்னும் எத்தனை பேர் கீழே தள்ளப்படுவார்கள் என தெரியவில்லை என தெரிவித்துள்ளதுடன், பாஜக தலைவர்களே உஷார் என்றும் கூறியுள்ளார். கர்நாடகாவில் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தாங்கள் பின்வரிசையில் அமரவைக்கப்பட்டதாக பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.