Bihar Nitish Kuamar: பெண்கள் தொடர்பான நிதிஷ் குமாரின் கருத்து அபாண்டமானது என பாஜக கண்டனம் தெரிவிக்கும் நிலையில், அவரது பேச்சு "பாலியல் கல்வி" பற்றியது என தேஜஸ்வி யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.


பாலியல் கல்வி பற்றி பேசிய நிதிஷ் குமார்:


பீகாரில் நடத்தி முடிக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் தெரிவித்த ஒரு கருத்து தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, “ பீகாரில் பெண் கல்வி உயர்ந்துள்ளது. இது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் உதவிகரமாக உள்ளது. ஒரு படித்த பெண் திருமணம் செய்துகொள்ளும்போது, கருவுறுதலை தடுப்பதற்கான வழிமுறகளை கணவருக்கு கற்று கொடுக்க முடியும். இது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது” என கூறினார். இதோடு, கணவன் - மனைவி இடையேயான சில அந்தரங்க விவகாரங்களையும் பேசியுள்ளார். இந்த பேச்சு தான் தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.


வலுக்கும் கண்டனங்கள்:


கணவன் - மனைவி இடையேயான அந்தரங்க விவகாரங்கள் தொடர்பாக சட்டப்பேரவையிலேயே, சைகைகளுடன் முதலமைச்சர் பேசியதற்கு அவையில் இருந்த பெண் உறுப்பினர்கள் அப்போதே ஆட்சேபனை தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சட்டப்பேரவைக்கு என ஒரு மாண்பு இருப்பதாகவும், அதை மீறி பேசியதோடு பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நிதிஷ்குமார் பேசியிருப்பதாகவும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.






பாஜக ஆவேசம்:


”இந்திய அரசியல் வரலாற்றில், நிதிஷ் குமார் போன்ற அநாகரீகமான தலைவர்  யாரும் இல்லை” என, பீகார் பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய இணை அமைச்சர் அஸ்வினி சௌபே பேசுகையில், ”எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை. வீடியோவைப் பார்த்தேன். அவர் கூறியது வெட்கக்கேடானது மட்டுமல்ல, விமர்சிக்கத்தக்கது. அவர் ராஜினாமா செய்வதோடு, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.


”மன்னிப்பு கோர வேண்டும்”


நிதிஷ் குமாரிடம் உடனடியாகவும் வெளிப்படையாகவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என,  நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் சார்பாகவும்  வலியுறுத்துவதாக, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசுகையில், அவரது பேச்சானது ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய கண்ணியம் மற்றும் மரியாதையை அவமதிக்கும் வகையில் உள்ளது” என கூறியுள்ளார்.


தேஜஸ்வி யாதவ் விளக்கம்:


சர்ச்சை தொடர்பாக பேசியுள்ள பீகார் துணை முதலமைச்ச தேஜச்வி யாதவ், “ நிதிஷ்குமாரின்  கருத்துகளைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.  மக்கள் பேசுவதற்கு தயங்கும் மற்றும் கூச்சப்படும் விவகாரம் பற்றி தான் விளக்கியுள்ளார். மக்கள் தொகை கட்டுப்படுத்துவது தொடர்பாக தான் அவர் விளக்க முயன்றுள்ளார்” என தெரிவித்துள்ளார்.