75 வது சுதந்திர தின விழாவை ஒட்டி இல்லந்தோறும் தேசியக்கொடி பிரச்சாரத்தை நடத்துபவர்கள், 52 வருடங்களாக தேசியக்கொடி ஏற்றாத தேச விரோத அமைப்பில் இருந்து வந்தவர்கள் என்று ராகுல் செய்த ட்வீட்டிற்கு பாஜக பதிலளித்துள்ளது.
ஹர் கர் திரங்கா
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், கடந்த 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் சோசியல் மீடியா அக்கவுண்டின் முகப்பு புகைப்படத்தை (டிபி) தேசியக்கொடியாக மாற்றிட மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி அவரும், பாஜக தலைவர்களும் தங்கள் சமூக ஊடக கணக்கு பக்கங்களின் முகப்பு படங்களை தேசியக்கொடிக்கு மாற்றி வருகின்றனர். அதேபோல காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அவர்களுடைய சமூக ஊடக பக்கங்களின் முகப்பு படங்களை நேரு தேசிய கொடியை பிடித்துக்கொண்டு நிற்பது போன்ற புகைப்படத்திற்கு மாற்றி வருகின்றனர்.
நேஷனல் ஹெரால்டுக்கு சீல்
இந்நிலையில், இந்திய தேசிய கொடியை தயாரித்து வழங்குவதற்கு அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே அலுவலகமான 'கர்நாடக காதி கிராமோத்யோக சம்யுக்தா' சங்கத்திற்கு ராகுல் காந்தி பார்வையிட சென்றபோது நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்தனர்.
ராகுல் ட்வீட்
அதுகுறித்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இல்லம்தோறும் மூவர்ணக் கொடி (ஹர் கர் திரங்கா) என்னும் பிரச்சாரத்தை நடத்துபவர்கள் 52 ஆண்டுகளாக தேசியக் கொடியே ஏற்றாத தேச விரோத அமைப்பில் இருந்து வந்தவர்கள் என்பதை வரலாறு சொல்லும். சுதந்திரப் போராட்டத்தின் போதும் காங்கிரஸை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை, இன்றும் தடுக்க முடியாது" என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மறைமுகமாக சாடினார்.
ஆர்எஸ்எஸ் பதில்
இந்த குற்றச்சாட்டுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏற்கனவே பதில் தந்துவிட்டனர். இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், தனியார் கொடியேற்ற நிகழ்வுகளில் கலந்துத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்து உள்ளோம் என்று விளக்கம் அளித்து இருந்தனர். தற்போது பாஜகவும் அந்த குற்றச்சாட்டுக்கு ஆர்எஸ்எஸ்-ற்கு ஆதரவாக பதிலளித்து உள்ளது.
பாஜக நிலைப்பாடு
பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிலர் சர்ச்சைகளை உருவாக்கி நாட்டைப் பிளவுபடுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். காங்கிரஸும், ராகுல் காந்தியும் ஆர்எஸ்எஸ்ஸை குறி வைத்து கருத்துக்கள் கூறுகின்றனர். ஆர்எஸ்எஸ்-இன் ஒவ்வொரு இழையிலும் தேசபக்தி மற்றும் நாட்டிற்கு சேவை செய்யும் உணர்வு நிறைந்துள்ளன. வெள்ளம், பூகம்பம் மற்றும் கோவிட் போன்ற பேரிடர்களின்போது, யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதில் ஆர்எஸ்எஸ் எப்போதும் தெளிவாக இருந்துள்ளது. ஆர்எஸ்எஸ் குழந்தைகளின் கல்விக்காகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஒருபுறம், நாடு 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை வரவேற்றதுடன், அது குறித்து பெருமிதம் கொள்ளும் இவ்வேளையில், இது போன்ற கருத்துக்களை பற்றியும் மோசமாக நினைக்கும் மனநிலை உள்ளது", என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்