விக்ரம் ஏ சாராபாய், சதீஷ் தவான், யு. ஆர். ராவ், டி.என்.சேஷன் போன்றோர் அவரவர் துறையில் வியத்தகு புதுமைகளை செய்தவர்கள். ஆனால் அவர்கள் பங்களிப்புக்கு ஏற்ப மரியாதை செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் எனக்கிருக்கிறது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.


அண்மையில் நடிகர் மாதவன் இயக்கத்தில்  ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் என்ற படம் வெளியானது. இப்படத்தில் மாதவன் நம்பி நாராயணாக நடித்ததோடு மட்டுமல்லாமல் கதை , திரைக்கதை , இயக்கம் என அனைத்தையும் அவரே கையாண்டார். இந்தப் படத்தில் சிம்ரன், சூர்யா, ஷாரூக்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நம்பி நாராயணனை மக்களுக்கு அடையாளப்படுத்தியுள்ளது.


நீங்கள் யார் என்று கேட்டேன்:


இந்நிலையில் நம்பி நாராயணன் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், முதன்முதலில் நான் விக்ரம் சாராபாயை பார்த்தபோது நீங்கள் யார் என்று கேட்டேன். அவர், என்னை விக்ரம் என்று அழைப்பார்கள் என்று சொன்னார். அப்போது கூட எனக்கு அவர் தான் விக்ரம் ஏ சாராபாய் என்பது தெரியவில்லை. அவர் அங்கிருந்து சென்றவுடன் கலாம் என்னிடம், என்னய்யா இப்படி கேட்டுட்ட. அவர் தான் விக்ரம் ஏ சாராபாய் என்றார். உண்மையில் அவர் விண்வெளித் துறைக்கு செய்தவை எல்லாம் வியத்தகு வகையறா. இப்போது ககன்யான் திட்டத்தை செயல்படுத்தக் கூட அவரது கான்செப்ட் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.


ஆனால் அவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. விக்ரம் ஏ சாராபாய், சதீஷ் தவான், டி.என்.சேஷன் போன்றோர் அவரவர் துறையில் வியத்தகு புதுமைகளை செய்தவர்கள். ஆனால் அவர்கள் பங்களிப்புக்கு ஏற்ப மரியாதை செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. வெளிநாடுகளைப் போல் அவர்களுக்கு எல்லாம் அவ்வளவு பெரிய சம்பளமும் இல்லை. ஆனாலும் அவர்கள் அவ்வளவு செய்திருக்கிறார்கள். 1973ல் நான் விகாஸ் என்று ஒரு இன்ஜினுக்கு பெயர் வைத்தேன். அப்போது எல்லோரும் அதற்கு அர்த்தம் கேட்டனர். நான் வளர்ச்சி என்ற அதன் அர்தத்தை சொன்னேன். ஆனால் உண்மையில் நான் மனதில் நினைத்தது விக்ரம் ஏ சாராபாய் என்பதன் சுருக்கும். உண்மையில் விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், டி.என்.சேஷன் இவர்களின் பங்களிப்பு எல்லாம் எவ்விதத்திலும் குறைந்தது இல்லை. இவர்களைப் பற்றியும் மக்கள் அறியச் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் பாடப்புத்தகங்களிலாவது இவர்களைப் பற்றி நாம் பதிவு செய்ய வேண்டும்.


இவ்வாறு நம்பி நாராயணன் பேசியுள்ளார்.




யார் இந்த நம்பி நாராயணன்?


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) பணியாற்றி கடந்த 2001-ல் ஓய்வு பெற்றவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். க்ரோயோஜெனிக் எனப்படும் திரவ எரிபொருள் தயாரிப்பு தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடமிருந்து பெற இந்தியா முயற்சித்தது. ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால், ரஷ்யா தொழில்நுட்பப் பகிர்வில் பின்வாங்கியது. இதனையடுத்து இந்தியா தானாகவே திரவ எரிபொருளை உருவாக்க முயன்றது. 1970களின் ஆரம்ப காலத்தில், அப்துல் கலாம் குழுவில் பணியாற்றிய போது, ஏவுகனை திரவ எரிபொருள் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.


திரவ எரிபொருள் இயந்திரங்களின் எதிர்காலத் தேவையை முன்கூட்டியே கணித்தார். இஸ்ரோவின் தலைவர் சதீஷ் தவான், யு. ஆர். ராவ் ஆகியோரின் ஆதரவுடன், 600 கிலோ அழுத்தம் கொண்ட முதல் திரவ உந்து வாகனத்தை 1970களில் வெற்றிகரமாக உருவாக்கினார்.


விண்வெளி ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கிய மைல் கல்லான திரவ எரிபொருளை தயாரித்து திருப்புமுனையை ஏற்படுத்திய நம்பி நாராயணன், கடந்த 1994-ல் கைது செய்யப்பட்டார். இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாகவும் அந்த நாடுகளுக்காக உளவு பார்த்ததாகவும் கூறி கேரள போலீஸார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மாலத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இஸ்ரோ க்ரியோஜெனிக் தொழில்நுட்பம் குறித்து சில ஆவணங்களை மட்டுமே வைத்துக் கொண்டு நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். அவருடன் விஞ்ஞானிகள் பி.சசிகுமார், கே.சந்திரசேகரன், ஒப்பந்ததாரம் எஸ்.கே.சர்மா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 4 ஆண்டு காலமாக சிறையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நம்பி நாராயணன் ஏராளமான கொடுமைகளை அனுபவித்திருக்கிறார். நீண்ட காலத்திற்குப் பின்னரே நம்பி நாராயணன் மீது போலியாக அடிப்படை ஆதாரமின்றி வழக்கு தொடரப்பட்டுள்ளது உறுதியானது.