குடித்துவிட்டு போதை நிலையில் குருத்வாராவுக்குள் வந்ததாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது பாஜக சார்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


பாஜக தலைவர் தஜீந்தர் பால் சிங் பாகா இந்தப் புகாரை பதிவு செய்தார். இவ்விவகாரத்தில் பஞ்சாப் மாநில காவல்துறை டிஜிபி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டியுள்ளார்.


இது தொடர்பாக தஜீந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், குருத்வாராவுக்குள் குடித்துவிட்டு நுழைந்ததற்காக நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளேன். டிஜிபி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன் என்று பதிவிட்டு கூடவே பஞ்சாப் போலீஸாருக்குக் கொடுத்து புகார் மனுவின் ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.


முன்னதாக ஷிரோன்மனி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியன்று குருத்வாராவின் தக்த் தம்தமா ஷாஹிப் பகுதிக்கு குடித்துவிட்டு வந்தார் எனப் புகார் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. தனது செயலுக்காக பஞ்சாப் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது பாஜக அவர் மீது போலீஸில் புகார் தெரிவித்துள்ளது.


பஞ்சாப் முதல்வராகி ஒரு மாதமான நிலையில், அவர் மீது போலீஸ் புகார் பதிவாகியுள்ளது. முன்னதாக இன்று காலை தான், பஞ்சாப் மக்களுக்கு ஜூலை 1 முதல் 300 யூனிட் மின்சாரம் மாதந்தோறும் இலவசம் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் மாலையில் அவர் மீது புகார் பாய்ந்த செய்தி வந்துள்ளது.


தேர்தல் பிரச்சாரம்தொட்டே பாஜக பகவந்த் மான் வைத்த மிகப்பெரிய குற்றச்சாட்டு, அவர் ஒரு குடிகாரர் என்பதே.


யார் இந்த பகவந்த் மான்?


பஞ்சாப் கிராமமொன்றில் பிறந்த பகவந்த் மான், காமெடி நடிகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். 48 வயதாகும் இவர், சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சடோஜ் கிராமத்தில் ஜாட் சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரியில் படிக்கும்போது காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். 
கல்லூரி படிப்புக்குப் பின்னர் சக நண்பர்களுடன் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அரசியல் நிகழ்வுகளில் ஆர்வம் கொண்டிருந்த பகவந்த், உள்ளூர் மற்றும் தேசிய அரசியல் போக்குகளைத் தனக்கே உரித்தான வகையில் நடித்து காண்பிக்கத் தொடங்கினார். தேசிய விருது பெற்ற திரைப்படமான 'மெயின் மா பஞ்சாப் தீ' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.


கல்லூரி நாட்களில், கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டாலும், பகவந்த் மான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. 2011-ல் பஞ்சாப் மக்கள் கட்சியைத் தொடங்குபவர்களில் ஒருவராக, நிறுவனத் தலைவராக பகவந்த் மான் அரசியலில் இறங்கினார்.  தொடர்ந்து 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் லெஹ்ரா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். டெல்லியைத் தொடர்ந்து, 2014-ல் பஞ்சாப்பில் காலடி எடுத்துவைத்த புதிய கட்சியான ஆம் ஆத்மியில் சேர்ந்தார். அவருக்கு, உடனடியாக ஆம் ஆத்மி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. தனது சொந்தத் தொகுதியான சங்ரூரில் களம் கண்டார் பகவந்த் மான்.  நாடாளுமன்றத்தில் கால் பதித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.