குஜராத்தில் அனுமன் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, வேலை இல்லா திண்டாட்டத்தை தீர்ப்பதற்கு நாட்டுமக்களுக்கு அறிவுரையை கூறினார்.


இந்தியாவில் 4 திசைகளிலும் அனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி முதல் சிலை வடக்கு பகுதியான சிம்லாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தெற்கே ராமேஸ்வரத்தில் சிலை நிறுவுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு அண்மையில் பணிகள் தொடங்கின. 2-வது சிலை குஜராத் மாநிலம் மோர்பி நகரில் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த சிலை இந்தியாவின் மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது. 108 அடி உயரம் கொண்ட இந்த சிலையை அமைக்கும் பணி ரூ 10 கோடி மதிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத்தில் உள்ள 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.



சிலையை திறந்து வைத்து பேசிய மோடி கூடியிருக்கும் அனைவருக்கும், நாட்டு மக்களுக்கும் அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள் தெரிவுதார். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் அனுமனின் இந்த பிரமாண்ட சிலை இன்று மோர்பியில் திறக்கப்பட்டுள்ளது. நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனுமன் பக்தர்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அனுமன் அனைவரையும் தனது பக்தியால், தனது சேவையால் இணைக்கிறார். அனைவரும் உத்வேகம் பெறுகிறார்கள். ராமேஸ்வரத்திலும் நாட்டின் கிழக்கு பகுதியான மேற்கு வங்கத்திலும் அனுமன் சிலைகள் நிறுவப்படும் என நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.






மேலும் அவர் வேலை இல்லா திண்டாட்டத்தை போக்குவது குறித்து பேசுகையில், "இந்தியா இப்போதிருக்கும் நிலையிலேயே இருந்தால் எதிர்வரும் காலங்களில் உலக நாடுகளுடன் போட்டி போடுவது கடினம். உலகம் முழுவதுமே சுய சார்பு பற்றி சிந்திக்கும் அளவுக்கு உலக சூழ்நிலை மாறி உள்ளது, உள்ளூர் பொருட்களை மட்டுமே வாங்க மக்களுக்கு தயாரிப்பாளர்கள் கற்றுக்கொடுக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். நம் வீட்டில், நம் மக்கள் தயாரித்த பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கற்பனை செய்து பாருங்கள், இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் நன்றாக இருப்பதாக நமக்கு தோன்றும், ஆனால் அது நம் மக்களின் உழைப்பின் உணர்வை, நம் தாய் மண்ணின் வாசனையை தராது. 25 ஆண்டுகள், உள்ளூர் பொருட்களை மட்டுமே பயன்படுத்தினால், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டமே இருக்காது" என்றார்.