ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த மோகன் சரண் பதவியேற்றா. இவ்விழாவில் பிரதமர் மோடி, ஒடிசா முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துகள் தெரிவித்தனர்.
ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி, துணை முதல்வர்களாக கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா மற்றும் இதர அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு மாநிலத்தின் ஆளுநர் ரகுபர் தாஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பாஜக வெற்றி:
பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக், ஒடிசா மாநிலத்தில் தொடர்ந்து 5 முறை ஆட்சி செய்து வருகிறார். இதனால் நவீன் பட்நாயக்கின் கோட்டையாக ஒடிசா மாநிலம் கருதப்பட்டது. சுமார், கடந்த 24 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த நிலையில், மீண்டும் 6வது முறையாக ஆட்சியை பிடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.
ஆனால், இந்தாண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி தோல்வியை சந்தித்தது. ஒடிசா வரலாற்றில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 51 இடங்களை மட்டுமே பிஜு ஜனதா தளம் கைப்பற்றியது. 14 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
முதலமைச்சராக பதவியேற்பு:
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மாஜி, நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கியோஞ்சர் தொகுதியில் போட்டியிட்டு 11 ஆயிர்த்து 577 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மோகன் சரண் மாஜி.
இந்நிலையில், மோகன் சரண் மாஜி-க்கு, ஆளுநர் ரகுபர் தாஸ் பதவி இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் இரண்டு துணை முதலமைச்சர்களான கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோரும் மற்றும் இதர அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.