ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சென்ற முன்னாள் ஆளுநரும் தமிழ்நாட்டை சேர்தவருமான தமிழிசை சவுந்தரராஜனை மேடையிலேயே அமித் ஷா அருகே அழைத்து, விரலை நீட்டி அவரை கண்டிப்பதுபோல், கடுமையான முகத்துடன் பேசியது இப்போது தமிழ்நாட்டில் பேசுபொருளாகியிருக்கிறது.


அண்ணாமலை குறித்து பேசியதற்கு கண்டிப்பா ?


ஒரு நேர்காணலில் பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை குறித்து மறைமுகமாக தமிழிசை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த விவகாரம் தொடர்பாக, அண்ணாமலை அமித் ஷாவிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்துதான், விழா மேடையில் வணக்கம் சொல்ல வந்த தமிழிசையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோபத்துடன் விரலை நீட்டி கண்டித்து பேசியதாக பரபரப்பு செய்தி வெளியானது. ஆனால், உண்மையில் தமிழிசையிடம் அமித் ஷா என்ன சொன்னார் என முழுமையாக யாருக்கும் தெரியாத நிலையில், அமித் ஷாவின் உடல் மொழியை வைத்து, அவர் தமிழிசையை ஏதோ ஒரு விஷயத்திற்காக கண்டித்துள்ளார் என்றே  ஊடகங்களும் சமூக வலைதள வாசிகளும் புரிந்துக்கொண்டு அந்த வீடியோவை வைரல ஆக்கினர்


சென்னை வந்த தமிழிசை - கையெடுத்து கும்பிட்டு அப்பீட்


இந்நிலையில், ஆந்திராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த தமிழிசையிடம் அமித் ஷா உங்களிடம் மேடையில் என்ன சொன்னார் என செய்தியாளர்கள் மைக்கை நீட்டி கேள்வி எழுப்பினர். வழக்கமாக, எந்த கேள்வி கேட்டாலும் நிதானமாக நின்று ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கும் தமிழிசை இந்த முறை எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல், நின்று கூட பேசாமால், கையெடுத்து கும்பிட்டப்படியே தன்னுடைய காரில் ஏறி கதவை சாத்திக்கொண்டு புறப்பட்டுவிட்டார். 


அமித் ஷா செயலுக்கு வலுக்கும் எதிர்ப்பு


அரசியலமைப்பு பொறுப்பான ஆளுநர் பதவி வகித்த ஒருவரை அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கும் தமிழிசையை மேடையிலேயே அமித் ஷா விரலை நீட்டி கண்டிக்கும் தொனியில் பேசியது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல என சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


குறிப்பாக, திமுக செய்தித் தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்னாதுரை தனது சமூக வலைதள பக்கத்தில் அமித் ஷாவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதில், ”இது என்ன வகையான அரசியலோ? தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான பெண் அரசியல்வாதியை மேடையில் வைத்து கடுமையான சொற்களையோ மிரட்டும் உடல் மொழியையோ வெளிப்படுத்துவது நாகரீகமா? எல்லோரும் இதனை பார்ப்பார்கள், என்பதை அறியாதவரா அமித் ஷா? மிக தவறான முன்னுதாரணம்!” என குறிப்பிட்டுள்ளார். 


உண்மையில் என்ன நடந்தது என்பதை தமிழிசைதான் சொல்ல வேண்டும்


தமிழக பாஜக மாநில தலைவராக இருந்தவர், தெலுங்கானா, புதுச்சேரி என இரண்டு மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்த ஒருவர். அதுவும் பாஜக தலைமைக்கு நெருக்கமான பெண் தலைவராக அறியப்படும் தமிழிசையை அழைத்து உண்மையில் அமித் ஷா என்னதான் சொன்னார் ? என்பதை அமித் ஷாவோ அல்லது தமிழிசையோ வெளியில் சொன்னால்தான், அங்கு நடந்தது என்ன என்பதில் ஒரு தெளிவு கிடைக்கும். ஆனால், தமிழிசை இந்த கேள்விக்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் சென்றுள்ள நிலையில், உண்மையில் அமித் ஷா கண்டித்திருப்பாரோ என்று எண்ணத் தான் தோன்றுகிறது என சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்த் விழுகின்றன.


மீண்டும் மாநில தலைவர் ஆசையில் இருக்கிறாரா தமிழிசை


ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழ்ந்த தமிழிசை, மீண்டும் பாஜக மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்து அதற்கான காய்களை நகர்த்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, கட்சியில் சட்டவிரோத செயல்பாடுகளை செய்பவர்களை இணைத்துக்கொண்டதை குறித்தும் அதற்கு மாநில தலைவர் அண்ணாமலைதான் காரணம் என்ற ரீதியில் பேசினார் என்று கூறப்பட்டு வருகிறது.


ஆனால், மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவின் தேசிய தலைவர்கள் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நீடிப்பதையே விரும்புவதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலை தமிழ்நாட்டில் அண்ணாமலையை வைத்தே எதிர்கொள்ள அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படும் நிலையில், இதில் அதிருப்தியடைந்த தமிழிசை அவருக்கு எதிரான தொனியில் பேசி வருவதாகவும் கமலாலாய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் தமிழிசை ஆதரவாளர்களுக்கும் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சமுக வலைதளங்களில் கோஷ்டி சண்டைகள் எழுந்திருக்கின்றன.


இதனை பாஜக தேசிய தலைமை ரசிக்காததால்தான், விழா மேடையிலேயே தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டித்ததாக கூறப்படுகிறது.


விழா மேடையில் நடந்தது என்ன ?


 


ஆந்திராவில் இன்று 4வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிதின் கட்கரி, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பவன் கல்யான், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். 


இந்த நிலையில் மேடையில் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அமர்ந்திருந்த்னர். அப்போது மேடைக்கு வந்த தமிழிசை அனைவருக்கு கையெடுத்து வணக்கம் சொல்லி சென்று கொண்டிருந்தார். 


அமித்ஷா பக்கத்தில் அவர் வரும்போது சற்று கவனிக்காமல் இருந்த அமித்ஷா பின்னர் சுதாரித்துக்கொண்டு தமிழிசையை அருகில் அழைத்தார். அப்போது தமிழிசை பார்த்து அமித்ஷா விரலைக்காட்டி எச்சரிக்கை செய்வது போல் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இது அப்பட்டமாக அங்கிருந்த கேமராவில் பதிவானதோடு அந்த காட்சிகள் வைரலும் ஆனது. 


இதையடுத்து அமித்ஷாவின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 


இதைத்தொடர்ந்து ஆந்திராவில் இருந்து சென்னை விமானநிலையம் வந்த தமிழிசையிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் தமிழிசை வழக்கம்போல் தனக்கே உரிய சிரிப்புடன் கையெடுத்து கும்பிட்டுவிட்டு அங்கிருந்த காரில் ஏரி சென்று விட்டார். இது மேலும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. 






அண்ணாமலைக்கு எதிராக தமிழிசை பேசியதே இதற்கு காரணம் என செய்திகள் கசிந்து வருகின்றன. கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை அசிங்கமாக பாஜக நிர்வாகிகள் பேசக்கூடாது என கண்டித்தார். மேலும் நான் கட்சியில் இருந்தபோது கட்டுப்பாடுகள் இருந்தது எனவும் இப்போது அது இல்லை எனவும் மறைமுகமாக அண்ணாமலையை சாடியிருந்தார். 


இதுகுறித்தே அமித்ஷா தமிழிசையை கண்டித்திருக்கலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு,  மக்களவை தேர்தலில் தென்சென்னையில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.