ராஜஸ்தான் மாநிலம் மகள்கள் மற்றும் சகோதரிகள் மீதான காங்கிரசின் அட்டூழியங்களை, பொறுத்துக்கொள்ளாது என பிரதமர் மோடி காட்டமாக பேசியுள்ளார்.


ராஜஸ்தான் அரசியல்:


காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில், நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே, அதிகார மோதல் நிலவி வருகிறது. இதனையே பயன்படுத்தி நடப்பாண்டு தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என, பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் தான் அவர்களுக்கு எண்ணத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, ராஜஸ்தானில் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட எம்.எல்.ஏவின் பேச்சு காங்கிரசுக்கே பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 


அமைச்சர் சொன்ன ரெட் டைரி..!


2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆன குதா, 2019ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்து அமைச்சரானார். இந்நிலையில் தான், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவில்லை என விமர்சித்ததால், குதாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, தற்போது அவர் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் பேசிய அவர் “அமலாக்கத்துறை சோதனைகளின் போது, அசோக் கெலாட் உத்தரவின்பேரில் தாம் ரெட் டைரி ஒன்றை பதுக்கி வைத்திருக்கிறேன். அதில் காங்கிரஸின் அத்தனை ஊழல் விவரங்களும் அடங்கி இருக்கிறது” என பேசி ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


பிரதமர் மோடி ஆவேசம்:


இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ”எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள இந்தியா எனும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் என்பது ஒரு பாதை அறியாத கட்சியாக மாறியுள்ளது. மோசடி நிறுவனங்கள் போன்று அவர்கள் தங்களது பெயர்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.


”இந்தியா” என்ற ஸ்டிக்கர்


தீவிரவாதத்தின் முன் சரணடைந்த தங்களின் கறையை நீக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் பெயரை மாற்றியுள்ளனர். அவர்களின் வழிகள் நாட்டின் எதிரிக்கு நிகரானவை. இந்தியா என்ற பெயர் தங்களின் பழைய தேசபக்தியைக் காட்ட அல்ல. கொள்ளை அடிப்பது தான் அவர்களது நோக்கம். இந்தியா என்ற ஸ்டிக்கரை பயன்படுத்தி தங்கள் மீதுள்ள பாவங்களை ஒழித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். உண்மையில் இந்தியா மீது அக்கறை இருந்திருந்தால், வெளிநாட்டினரை இந்திய விவகாரங்களில் தலையிடச் சொல்லியிருப்பார்களா? இந்திராதான் இந்தியா, இந்தியா தான் இந்திரா' என்று ஒருமுறை கோஷம் போட்டார்கள். அப்போது மக்களால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டனர். திமிர் பிடித்த இவர்கள் மீண்டும் இதை செய்திருக்கிறார்கள். UPA தான் இந்தியா, இந்தியா தான் யுபிஏ என்கிறார்கள். மக்கள் அவர்களை மீண்டும் வேரோடு அகற்றுவர்.


ஊழலே வெளியேறு:


மகாத்மா காந்தி ஒரு காலத்தில்  ”வெள்ளையனே வெளியேறு” என்ற முழக்கத்தை கொடுத்தார். அதனால், ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அதேபோல், வளமான இந்தியாவை உருவாக்க தற்போது உறுதிபூண்டுள்ளோம். மகாத்மா காந்தி 'வெள்ளையனே வெளியேறு' என்ற முழக்கத்தை வழங்கியது போல், இன்றைய மந்திரம் ஊழலே இந்தியாவை விட்டு வெளியேறு. அது இந்தியாவை விட்டு வெளியேறினால் மட்டுமே தேசம் காப்பாற்றப்படும்" என ஆவேசமாக பேசினார் பிரதமர் மோடி.


ரெட் டைரி விவகாரம்:


தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் குதா பேசிய ரெட் டைரி தொடர்பாக பேசிய பிரதமர் மோடி “அந்த ரெட் டைரி விவகாரம் மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கும். ராஜஸ்தான மாநிலம் தனது மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான வன்முறை அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ளாது. ராஜஸ்தானில் அரசு என்ற பெயரில் பொய்யர் மற்றும் கொள்ளையர்கள் கடை நடத்தி வருகின்றனர்” என கடுமையாக சாடினார்.