மணிப்பூர் விவகாரத்தில், அது தங்களின் சித்தாந்தம் என தெரிந்து இருப்பதால் தான் பிரதமர் மோடி எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். 


மணிப்பூரில் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மைதேயி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு நாகா மற்றும் குகி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் கடந்த மே மாதம் வன்முறை வெடித்தது. தொடர்ந்து 3 மாதங்களாக நடைபெற்று வரும் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்களில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆங்காங்கே வீடுகளும், வாகனங்களும், கடைகளும் பற்றி எரிந்ததில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 


இதற்கிடையே கலவரத்தின் போது பழங்குடியினத்தை சேர்ந்த பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், நாடு முழுவதும் மணிப்பூர் சம்பவதை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் அமைப்பும், எதிர்கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்திலும் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகள் கடும் அமளியிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்த நிலையில் மணிப்பூர் சம்பவத்தில் பிரதமரை கடுமையாக விமர்சித்து ராகுல்காந்தி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், ” மணிப்பூர் பற்றி எரியும் போது பிரதமர் மோடி ஏதாவது பேசுவார் என நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்து இருப்பீர்கள். அவர் விமானத்தின் மூலம் மணிப்பூருக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து பேசுவார் என பலர் எதிர்ப்பார்த்து இருப்பீர்கள். இதற்கு முன்பு பிரதமராக இருந்தவர்கள் இதை தான் செய்தார்கள். ஆனால், இதுவரை மணிப்பூர் மக்களை பிரதமர் மோடி சந்தித்து பேசாமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. 






மோடி மக்களுக்கு பிரதமராக இல்லை, ஆர்.எஸ்.எஸ்.க்கு தான் அவர் பிரதமராக உள்ளார். மணிப்பூர் பற்றி எரிவது தங்களுடைய சித்தாந்தம் என்பதை தெரிந்து இருப்பதால் தான் பிரதமர் வாய்த்திறக்காமல் மவுனமாக உள்ளார். ஆனாலும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் சித்தாங்களை எதிர்த்து இந்தியா போராடி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் ராணுவத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளவே விரும்புகிறது” என கடுமையாக பேசியுள்ளார். பிரதமரை விமர்சித்து ராகுல்காந்தி பேசும் வீடியோவை காங்கிரஸ் கட்சியினர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.