கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வராக அந்த மாநில உள்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகனுமான பஸவராஜ் சோமப்ப பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அங்கே சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடியுள்ள நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.  






பஸவராஜின் தந்தை எஸ்.ஆர். பொம்மை ஒருங்கிணைக்கப்பட்ட கர்நாடகாவின் 11வது முதலமைச்சராகப் பதவி வகித்தவர்.ஜனதா கட்சியைச் சேர்ந்த பொம்மை ஆகஸ்ட் 1988ல் கர்நாடக மாநிலத்தின் முதல்வரானார். அதற்குப் பிறகு ஜனதா கட்சியும் லோக்தள் கட்சியும் இணைந்து ஜனதா தளமாக உருவானது. இதற்கிடையே ஜனதா தளத்தைச் சேர்ந்த கே.ஆர். மொலகேரி தனக்கு 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகச் சொல்லி பொம்மை ஆட்சியைக் கலைக்கவேண்டி ஆளுநரை வலியுறுத்தினார். இடையே சில குழப்பங்களை அடுத்து அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பரிந்துரையின் பேரில் எஸ்.ஆர்.பொம்மையின் ஆட்சியைக் கலைத்தார் ஆளுநர். தனது ஆட்சியைக் கலைத்தது செல்லாது என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பொம்மை. அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356ஐப் பயன்படுத்தி மத்திய அரசு மாநில ஆட்சியைக் கலைப்பதன் மீதான வரையறைகளை இந்த வழக்கின் வழியாக உச்சநீதிமன்றம் மறுசீராய்வு செய்தது. இதில் எஸ்.ஆர்.பொம்மையின் பங்கு அளப்பரியது. அவரது மகனான பஸவராஜ் பொம்மைதான் தற்போது முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.