இரண்டாம் அலை காலக்கட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தரவுகள் நடந்துவரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற 13 ஆகஸ்ட்டில் கூட்டத்தொடர் நிறைவடைய இருக்கும் சூழலில் முன்னதாக இந்தத் தரவுகள் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


முன்னதாக, கொரோனா சமயத்தில் ஆக்சிஜன் குறைபாட்டால் மரணம் நிகழ்ந்ததாக மாநிலங்கள் பதிவு செய்யவில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.


 






கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மிகவும் தீவிரமாக இருந்தது. குறிப்பாக இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் பற்றாகுறை மிகவும் அதிகமாக காணப்பட்டது. ஏனென்றால் முதல் அலையில் தமிழ்நாட்டின் ஆக்சிஜன் தேவை 280 மெட்ரிக் டன் ஆக இருந்தது. இதுவே இரண்டாவது அலையில் மே 17ஆம் தேதியின்படி 603 மெட்ரிக் டன் ஆக இருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடும் தட்டுப்பாடு இருந்தது.


இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரது பிரவீன் பவார் பதில் அளித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் அளித்த அறிக்கையில் இருந்து தெரிய வருகிறது. இரண்டாவது அலையின்போது, மாநில அரசுகளுக்கு தேவையான ஆக்சிஜன் சப்ளையை மத்திய அரசு சீராக பிரித்து வழங்கியது. இந்நிலையில், மாநில அரசுகள் வழங்கிய அறிக்கையின்படி ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் எவ்வாறு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது பற்றிய முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. 


இதுமட்டுமின்றி, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் ஆகியோருக்கு அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, கலந்தாய்வு செய்து அதற்கு ஏற்ப ஆக்சிஜன் பிரித்து வழங்கப்பட்டது” என தெரிவித்திருந்தார். 


தமிழ்நாட்டைப் பொருத்தவரை, கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 904  நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,33,962 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,904 ஆக உள்ளது.