ஐந்து மாநில தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் அக்கட்சி வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது. 230 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அதேபோல, ராஜஸ்தானில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் 115 இடங்களில் வெற்றிபெற்று பாஜக ஆட்சி அமைக்கிறது. 


பாஜக வென்ற மாநிலங்களில் தொடரும் சஸ்பென்ஸ்:


சத்தீஸ்கரின் 90 தொகுதிகளில் பாஜக 54 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் வென்ற தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டியும் சோரம் மக்கள் இயக்கம் வென்ற மிசோரத்தில் லால்டுஹோமாவும் முதலமைச்சராக பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக வென்ற மாநிலங்களில் அடுத்த முதலமைச்சர் யார்? என்பதில் தொடர் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. 


இந்த நிலையில், பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள பாலயோகி மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, பாஜக எம்பிக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பாஜக வென்ற மாநிலங்களின் அடுத்த முதலமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த முறை புது முகங்களுக்கு முதலமைச்சர் பதவி அளிக்கப்படும் என பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், மத்திய பிரதேச முதலமைச்சராக 4 முறை பதவி வகித்த சிவராஜ் சிங் சவுகானுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்படும். இந்திய அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்தவர்களில் சிவராஜ் சிங் சவுகானும் ஒருவர்.


பிரதமர் மோடி வீட்டில் நடந்த ஆலோசனை:


அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் நோக்கில் பிரதமர் மோடியின் வீட்டில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நடந்து முடந்த சட்டப்பேரவை பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


எனவே, மாநில தேர்தலில் மத்திய அமைச்சர்கள் உள்பட 21 எம்பிக்கள் களமிறக்கப்பட்டனர். ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் 7 எம்பிக்களும் சத்தீஸ்கரில் 4 எம்பிக்களும் தெலங்கானாவில் 3 எம்பிக்களும் பாஜக சார்பில் களமிறங்கினர். ஆனால், தெலங்கானாவில் போட்டியிட்ட 3 எம்பிக்களும் தோல்வி அடைந்தனர்.


ராஜஸ்தானில் போட்டியிட்ட எம்பிக்களில் மூவரும் மத்திய பிரதேசத்தில் போட்டியிட்ட பாஜக எம்பிக்களில் இருவரும் தோல்வி அடைந்தனர். சத்தீஸ்கரில் ஒருவரும் தோல்வி அடைந்தார்.