சாதி அரசியல் உள்ளிட்டவற்றிற்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருவதாக, அண்ணாமலையின் பாதயாத்திரையை (BJP Padayatra)தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.


அமித் ஷா தொடங்கி வைத்த பாதயாத்திரை:


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 9 ஆண்டுகள் பாஜக செய்த சாதனையை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரத்தில் தொங்கி வைத்தார். இதில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் பங்கேற்றனர்.


”பாதயாத்திரையின் நோக்கம் இது தான்”


தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா “ உலகத்தின் பழமையான மொழியான தமிழில் உங்களிடம் பேச முடியாததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த ராமேஸ்வரம் பூமியானது இந்தியாவின் , இந்து மதத்தின் நமது பாரம்பரியத்தின் சின்னமாக விளங்குகிறது. இந்த பூமியின் மக்கள் அனைவருக்கும் இருகரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ராமநாதசுவாமியின் அருளாசியுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்ல இருக்கிறார். இந்த என் மண், என் மக்கள் என்பது வெறும் அரசியல் சார்ந்த நடைபயணம் அல்ல. பழமையான தமிழ்மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான ஒரு நடைபயணம் ஆகும். என் மண் என் மக்கள் பயணம் தமிழ்நாட்டில் கலாசாரத்தையும் பண்பாட்டயும் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும், கல்கத்தாவிலிருந்து சோம்நாத் வரையில் கொண்டு செல்லும் ஒரு பயணம் ஆகும். இந்திய நாட்டின் 130 கோடி மக்களின் மனதிலே ஒரு மரியாதயை ஏற்படுத்துவதற்கான பயணம் தான் இது. தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்கான பயணம் தான் இது. தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதற்கான ஒரு பயணம் தான் இது.  தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை சீர்படுத்துவதற்கான பயணம் இது. ஊழல்வாதிகளை ஒழித்து ஏழை மக்களின் நலத்தினை பேணும் ஒரு அரசினை உருவாக்குவதற்கான பயணம் தான் இது.


”அண்ணாமலை செய்யப்போவது”


700 கிலோ மீட்டர் தூரம் நடந்து தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் அண்ணாமலை கடக்க உள்ளார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தொகுதிக்கும் பிரதமர் மோடியின் செய்தியை அண்ணாமலை கொண்டு செல்ல உள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வருவதற்காக அண்ணாமலை இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார். இந்த பயணத்தால் தமிழ்நாட்டின் கலாசாரத்தயும், பாரம்பரியத்தையும் அண்ணாமலை மேலும் வளர்க்க உள்ளார்.


”மோடி குறித்து பெருமிதம்”


பாரத பிரதமர் மோடி தமிழின் பெருமையை உலகின் பல்வேறு பகுதிகளில் எடுத்துரைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையிலேயே உலகின் பழமையான மொழியான தமிழ் குறித்து பேசியவர் பிரதமர் மோடி தான்.  இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஜி20 கூட்டங்களின் முத்திரையில் உள்ள “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வாசகத்தை ஐக்கிய நாடுகள் சபையில் பேசியவர் பிரதமர் மோடி. பிரான்சில் திருவள்ளுவரின் சிலை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மகாகவி பாரதியின் பிறந்த நாளான டிசம்பர் 11ம் நாளை, தேசிய மொழிகள் தினமாக அற்வித்து பெருமைபடுத்தியவர் பிரதமர் மோடி.


”தமிழை கொண்டாடும் பிரதமர்”


வட இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்காக 120 கோடி ரூபாய் செலவில் கலாசார மையத்தை பிரதமர் மோடி திறந்துள்ளார். காசி மற்றும் சவுராஷ்டிரா தமிழ்சங்கம் மூலம், தமிழின் பெருமையை நாட்டின் வடக்கிலும், மேற்கிலும் பரப்பியவர் பிரதமர் மோடி. பப்புவா நியூ கினியாவில் அந்நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்து பிரதமர் மோடி வெளியிட்டதன் மூலம், மாபெரும் பாரம்பரியத்தை அவர்கள் அறிய தொடங்கியுள்ளனர்.  புதியதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்ததன் மூலம், தமிழ் கலாசாரத்தையும், பெருமையையும் பிரதமர் மோடி கொண்டாடி இருக்கிறார்.


”சாதி அரசியலுக்கு எதிராக செயல்படுகிறோம்”


மோடி கடந்த 9 ஆண்டுகளில் சாதிவாதம், குடும்ப ஆட்சி மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக தனது பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.  எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பழைய UPA கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் மக்களிடத்திலே வாக்கு கேட்டு செல்லும்போது உங்களுடைய 2 ஜி ஊழலும், காமன்வெல்த் ஊழலும் தான் அவர்களுக்கு நினைவில் வரும். எப்போதெல்லாம் நீங்கள் மக்களிடத்திலே வாக்கு சேகரிக்க செல்கிறீர்களோ அப்போதெல்லாம், நீங்கள் கரியில் செய்த ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், இஸ்ரோவில் செய்த ஊழல் ஆகியவை தான் அவர்களுக்கு நியாபகம் வரும். இந்த எதிர்க்கட்சிகள் கூட்டணி தான், அரசியலமைப்பு சட்டதிருத்தம் 370-ஐ நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.


”காங்கிரசும், திமுகவும் தான் காரணம்”


தமிழ்நாட்டு மக்களிடையே கேள்வி கேட்கிறேன் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானதா? இல்லையா?. 370வது பிரிவை நீக்கியபோது காங்கிரசும், திமுகவும் அதை எதிர்த்தது. நாட்டை தீவிரவாதத்தில் இருந்து நீக்க வேண்டுமா? இல்லைய?. திவிரவாதத்தை ஒடுக்குவதற்காக சர்ஜிகல் ஸ்டிரைக் செய்தபோது, இந்த UPA கூட்டணி தான் அதை எதிர்த்தது. இதே UPA கூட்டணி தான், இலங்கையில் தமிழர்கள் ஒழிக்கப்பட காரணமாக இருந்தார்கள். அந்த கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் எதிர்கொண்ட இன்னல்களுக்கு காங்கிரசும், திமுகவும் தான் காரணம்” என அமித் ஷா கடுமையாக சாடினார்.