மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக பல ஆண்டுகளாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவிகிதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் வகையிலான இந்த மசோதா, கடந்த 1996ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அப்போது மசோதா நிறைவேற்ற படவில்லை.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா:
இதைதொடர்ந்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவரது ஆட்சி காலத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், போதிய ஆதரவு இல்லாமல் போனதால் அவரது கனவு நனவாகாமலே போனது. இதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கடந்த 2010ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றியது.
மாநிலங்களவையில் நிறைவேற்றினாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், அதை மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. இதை தொடர்ந்து, கடந்த 13 ஆண்டுகளாக மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாஜக தலைமையிலான அரசு நேற்று அறிமுகம் செய்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து வரும் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடரின்போது மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்த மசோதாவை அறிமுகம் செய்தார்.
மாநிலங்களவையில் தாக்கல்:
இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அதன் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெ.பி. நட்டா, "மசோதா இன்று நிறைவேறும் பட்சத்தில் 2029ஆம் ஆண்டு, மகளிர் இடஒதுக்கீடு மூலம் பெண்கள் தேர்வு செய்யப்படுவர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்திய கலாச்சாரத்தில் பெண்களுக்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. நாம் எப்போதும் அவர்களை 'சக்தி' என்றும் 'தேவி' என்றும் போற்றுகிறோம். சமுதாயத்திற்கு வழிகாட்டுபவர்களாக பார்க்கிறோம்" என்றார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு நட்டா பதிலடி:
மத்திய அமைச்சரவை செயலாளர்களாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மூன்று பேர் மட்டுமே உள்ளனர் என்ற காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த நட்டா, "2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி காலத்தில் ஓபிசியில் இருந்து எத்தனை செயலாளர்கள் இருந்தனர். 1992ஆம் ஆண்டுதான், ஓபிசி இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. தற்போதைய செயலாளர்கள் 1992க்கு முந்தைய பேட்ச்சை சேர்ந்தவர்கள்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான், ஓபிசி வகுப்பை சேர்ந்த முதல் பிரதமரை நாட்டுக்கு வழங்கியது. எங்களிடம் 27 ஓபிசி அமைச்சர்கள் உள்ளனர். காங்கிரஸின் மொத்த எம்.பி.க்களை விட எங்களிடம் ஓபிசி எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர். காங்கிரஸ் நாட்டை ஆண்ட போது ஓபிசி மக்களை பற்றி கவலைப்படவில்லை" என்றார்.