இந்திய கனட  நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கனட நாட்டவருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.


காலிஸ்தானிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறதா கனடா?


சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தானி ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளனர். குறிப்பாக, காலிஸ்தானி அதரவாளர்கள் செய்யும் செயல் இந்திய அரசை உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்த்தி வருகிறது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக கனட அரசு செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.


இச்சூழலில், கடந்த ஜூன் மாதம் கனடா நாட்டைச் சேர்ந்த காலிஸ்தான்  தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் தான் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.


அதாவது, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கன்டனம் தெரிவித்தது. மேலும்,  இந்த  விவகாரம் தொடர்பாக கனடாவுக்கான இந்திய தூதர் ஒருவரை அந்நாடு கனடாவை விட்டு வெளியேற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் கனடாவின் தூதர் அதிகாரி ஒருவரை வெளியேற்றியது.


இந்திய கனடா இடையேயான உறவில் விரிசல்:


இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கனட நாட்டவருக்கு விசா வழங்குவதை இந்திய தூதரகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதுகுறித்து BLS நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "செயல்பாட்டுக் காரணங்கள் காரணமாக இன்று முதல், இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் புதிய தகவல்களுக்கு BLS இணையதளத்தைப் பார்க்கவும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கனடாவில் விசா விண்ணப்ப மையங்களை வைத்திருக்கும் BLS International நிறுவனம், இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளது. இகுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய அதிகாரி ஒருவர், "தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அது சொல்ல நினைத்ததை சொல்லியுள்ளது" என்றார். கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து முதல்முறையாக, விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளது.


மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை:


இந்த தகவலை உறுதி செய்வதற்காக இந்திய தூதரகத்தின் இணையதளத்தை ஆய்வு செய்தோம். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் இயங்கவில்லை.


ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை நேற்று அறிவுறுத்தியிருந்தது. தொடர் பதற்றத்திற்கிடையே, கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.