கடந்த 9 ஆண்டுகளில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்த நிலையில், கட்சியை மீட்டெக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர் முயற்சிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த ஜனவரி மாதம், இந்திய ஒற்றுமை நடைபயணத்தை நிறைவு செய்தார். 


மக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் ராகுல் காந்தி:


நடைபயணத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதை தொடர்ந்து, கர்நாடக தேர்தலை முன்னிட்டு உணவை டெலிவரி செய்யும் நபருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். கடந்த மே மாதம், ஹரியானா மாநிலம் அம்பாலாவுக்கு லாரி டிரைவர்களுடன் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். 


சமீபத்தில், டெல்லியில் இரு சக்கர வாகனத்தை பழுது பார்க்கும் கடைக்கு சென்றார். அதன் தொடர்ச்சியாக, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் விவசாயிகளை சந்தித்து பேசினார்.


இந்த நிலையில், கிழக்கு டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்கு இன்று சென்ற ராகுல் காந்தி சுமை தூக்கும் தொழிலாளர்களை (போர்ட்டர்) சந்தித்துள்ளார். போர்ட்டர்கள் கொடுத்த சிவப்பு சீருடையையும் பேட்ஜையும் அணிந்துகொண்டு சூட்கேஸை தலையில் சுமந்தவாறு அவர்களுடன் சிறிது நேரம் நடந்து சென்றார்.


சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கைகோர்த்த ராகுல் காந்தி:


டெல்லியின் பிஸியான முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையங்களில் ஒன்றாக ஆனந்த் விஹார் ரயில் நிலையம் உள்ளது. அங்கு பணிபுரிந்து வரும் போர்ட்டர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்ற ராகுல் காந்தி, ரயில் நிலையத்திற்கு சென்று அவர்களுடன் உரையாடியுள்ளார்.


சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி மேற்கொண்ட உரையாடல் தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 
அதில், சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், "குறைந்தது ஐந்து நிமிடங்களாவது ராகுல் காந்தி எங்களை வந்து சந்திக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்" என்றார்.


வீடியோவில் பேசிய மற்றொரு சுமை தூக்கும் தொழிலாளி, "அவர் ஏழைகளுக்கு ஆதரவானவர் என்று நான் நம்புகிறேன். அவர் எங்களுடன் சேர்ந்து நடப்பார். ஏழைகளின் நலன்களை இதயத்தில் வைத்திருப்பவர் போல் தெரிகிறது. அவரது கடின உழைப்பைத் தொடர வேண்டும் என்பதே அவருக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி. பாரத் ஜோடோ யாத்ரா அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க போகிறது" என்றார்.


"நாங்கள் அவருடன் எங்கள் பிரச்னைகளை விவாதிக்க விரும்புகிறோம். அவர் அவற்றைக் கேட்டு ஏதாவது செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்" என மற்றொரு சுமை தூக்கும் தொழிலாளி கூறியுள்ளார்.


கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி, டெல்லியின் மொத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சந்தையில் விற்பனையாளர்களுடன் ராகுல் காந்தி உரையாடல் மேற்கொண்டார். தனக்கும் தன்னை போன்ற பிற காய்கறி விற்பனையாளர்களுக்கும் விலைவாசி உயர்வு எவ்வளவு சிரமத்தை தந்திருப்பது என்பதை கண்ணில் கண்ணீருடன் ராகுல் காந்தியிடம் அங்கிருந்து வியாபாரி ஒருவர் பகிர்ந்து கொண்டார்.