மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹீரோக் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த நிங்கோம்பம் பிரேம் அங்கோம், சாலையோரத்தில் பூரி மற்றும் சமோசா விற்கும் கடையை நடத்தி வந்த பெற்றோருக்குப் பிறந்தவர். ஆனால், போதிய பணம் இல்லாத நிலைமை, ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்த்து அவர் தேர்ந்தெடுத்த ரோபாட்டிக்ஸ் மீதான அவரது அன்பைத் தடுக்கவில்லை.






பிரேமின் கவனம் ஸ்கிராப் மெட்டல் மற்றும் கார்ட்போர்டை நோக்கி திரும்பியது. தனது இன்ஜினியரிங் திறமையின் மூலம் 10 வயதிலிருந்தே ரோபோக்களை உருவாக்கத் தொடங்கினார். பிரேம், 2005 இல் 'ரோபோட்ஸ்' என்ற அறிவியல் புனைகதை திரைப்படத்தைப் பார்த்த பிறகு ரோபோக்களை உருவாக்கும் ஆர்வம் அவரை தொற்றிக் கொண்டது.


மெதுவாக அது அவருக்கு ஒரு பொழுதுபோக்காக மாறியது. இருப்பினும், சாலையோர உணவுக் கடையில் பிரேம் தனது பெற்றோருக்கு உதவி செய்ததால், தினமும் இரண்டு மணிநேரம் மட்டுமே தனது ஆர்வத்தைத் தொடர முடிந்தது. பொருள்களின் பற்றாக்குறை காரணமாக, புதிய ரோபோக்களை உருவாக்க அவர் முந்தைய ரோபோக்களின் பாகங்களை பயன்படுத்து உள்ளார்.


பிரேம் இப்போது எத்தனை ரோபோக்களை உருவாக்கினார் என்ற கணக்கு அவருக்கே தெரியவில்லை. அவரது படைப்புகளில் 'ரியல் ஸ்டீல்' திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு ரோபோ, ஒரு ரோபோ மினி கேன் குளிர்சாதன பெட்டி மற்றும் அயர்ன் மேன் ஹெல்மெட்டின் பல பதிப்புகளும் அடங்கும்.


பிரேம் பல்வேறு வகையான ரோபோக்களுக்கான தனது விரிவான திட்டங்களை சமூக ஊடகங்களில் பகிரத் தொடங்கினார். 'அயர்ன் மேன்'ஆக நடித்த ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் மீதான அவரது காதல், மிகவும் சிக்கலான ரோபாட்டிக்ஸ் திட்டத்தைத் தொடங்க வழிவகுத்தது.


பிரேமின் அயர்ன் மேன் ரோபோ சமூக ஊடகங்களில் வைரலானது. இது, மஹிந்திரா குழுமத்தின் தலைவரான பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்தது. மஹிந்திரா பிரேமின் வெளிப்படையான திறமையால் ஈர்க்கப்பட்டார். இதையடுத்து, பிரேமுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.


இளம் பொறியியல் திறமைசாலியான பிரேம் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள மஹிந்திரா பல்கலைக்கழகத்தில் ஆனந்த் மஹிந்திராவின் உதவியோடு சேர்ந்தார். அதுமட்டுமின்றி, பிரேம் மற்றும் அவரது உடன்பிறப்புகளின் கல்விக்கு நிதி உதவி அளிக்க முடிவு செய்திருந்தார்.


இந்நிலையில், பிரேம் குறித்து ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்களில் பலருக்கு பிரேமின் கதை நினைவிருக்கலாம். பல்கலைகழகத்தில் சேருவதற்கான எங்கள் வாய்ப்பை அவர் ஏற்றுக்கொண்டபோது நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அவர் இப்போது ஒரு பொறியியல் மாணவர். கடந்த கோடையில் அவர் மஹிந்திராவின் ஆட்டோ டிசைன் ஸ்டுடியோவில் பயிற்சி பெற்றார்.


பிரேம் மிகவும் வெற்றிகரமான கோடைகால இன்டர்ன்ஷிப்பை முடித்ததாக பிரதாப் என்னிடம் கூறியபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். குறிப்பாக, மேம்பட்ட கார் கதவு திறக்கும் வழிமுறைகளில் பணிபுரிந்தார். பொருள்களை உருவாக்குவதன் மூலம் கற்றுக்கொள்ளும் ஆர்வத்திற்காக பிரேமை பிரதாப் பாராட்டினார். கல்வி முறை நமக்கு அதிகம் தேவை" என பதிவிட்டுள்ளார்.