முகமது நபியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங் இன்று கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஹைதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


 






மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் தெற்கு மண்டல காவல்துறை துணை ஆணையர் பி.சாய் சைதன்யா தெரிவித்துள்ளார்.


திங்கள்கிழமை இரவு, முகமது நபி பற்றி ராஜா சிங் இழிவான கருத்துக்களைக் பேசியதாகக் கூறப்படும் வீடியோ வெளியானதை தொடர்ந்து, நகர காவல்துறை ஆணையர் சி.வி.ஆனந்த் அலுவலகம் மற்றும் ஹைதராபாத்தின் பிற பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.


சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும், அவரை உடனடியாக கைது செய்யுமாறும் போராட்டக்காரர்கள் கூறியதாக கூறப்படுகிறது. அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர்.