குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது பஞ்சமகால் மாவட்டம். இந்த மாவட்டத்தில் கோத்ரா – பவகாத் சாலையில் அமைந்துள்ளது ஜிம்மி கிளப் என்ற தனியார் விடுதி. இந்த விடுதியில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு கடந்த வியாழக்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பவகாத் குற்றப்பிரிவு போலீசார் அந்த இடத்திற்கு உடனடியாக நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த விடுதியில் சூதாட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், அவர்களிடம் ஏராளமான மதுபாட்டில்களும் இருந்தன. இதையடுத்து, சூதாட்ட விடுதியில் சூதாடிக்கொண்டிருந்த 25 நபர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 25 நபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று காத்திருந்தது.
கைது செய்யப்பட்ட 25 நபர்களில் இருந்த கேஷரிசிங் சோலங்கி என்பவர் எம்.எல்.ஏ. என்பதுதான் அந்த அதிர்ச்சி செய்தி. பா.ஜ.க. எம்.எல்,.ஏ.வான அவர் அந்த மாநிலத்தில் உள்ள மாதர் என்ற தொகுதியில் இருந்து அந்த மாநில சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர். தனியார் விடுதியில் சூதாடிய இடத்தில் போலீசார் ரூபாய் 5 லட்சத்து 81 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 8 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சொகுசு கார்களான அந்த 8 வாகனங்களின் மதிப்பு ரூபாய் 8 கோடியே 6 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட அனைவருக்கும் போலீசார் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஒரு சட்டப்பேரவை உறுப்பினரே இவ்வாறு சூதாட்டம் ஆடியதற்காக கைது செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது விஜய் ரூபானி அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த மாநில எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தில் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பாக குஜராத் மாநில முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாஜக எம்.எல்.ஏ., கைதாகியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.