உலக வரலாற்றிலேயே முதல் முறையாக குஜராத் மாநிலத்தின் பவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமணக் கொள்கைகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பாலிதானா நகரத்தில் அசைவ உணவுகளை விற்கவும் உட்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கே அசைவ உணவுகள் சட்ட விரோதம் ஆகும். இந்த முடிவு, இப்பகுதியில் கலாச்சார மற்றும் மதக் கொள்கைகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது.
சமணத் துறவிகள் 200 பேர் தொடர் போராட்டம்
பாலிதானாவில் உள்ள சுமார் 250 இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று சமணத் துறவிகள் சுமார் 200 பேர் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டனர். இந்த நிலையில், இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அஹிம்சையை முதன்மைக் கொள்கையாகக் கொண்ட சமண சமயத்தவரின் நம்பிக்கைகளை மதிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்கோட், வதோதரா, ஜுனாகத், அகமாதாபாத்திலும்...
பாலிதானா நகரம் சமணர்களின் புனிதத் தலம் ஆகும். இது ’சமணக் கோயில் நகரம்’ என்றும் கருதப்படுகிறது. புகழ்பெற்ற ஆதிநாத் கோயில் உள்ளிட்ட 800 கோயில்கள் இங்கு அமைந்துள்ளன. பாலிதானாவைத் தொடர்ந்து, ராஜ்கோட், வதோதரா, ஜுனாகத் மற்றும் அகமாதாபாத் ஆகிய குஜராத் நகரங்களும் இத்தகைய விதிமுறைகளை விதித்துள்ளன. ராஜ்கோட்டில் அசைவ உணவுகளைத் தயாரித்து, பொதுவெளியில் விற்க த் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது, மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் என்றும் சமூகத்தில் எதிர்மறையான தாக்கங்களை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இந்த விதிமுறைகளை வரவேற்றுள்ளார். போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் இருக்கும் இறைச்சிக் கடைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும அவர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் இறைச்சிக் கடைகளில் இறைச்சியைப் பார்வைக்கு வைத்து, மக்கள் மனதில் எதிர்மறையாக தாக்கங்களை ஏற்படுவதைத் தடுக்கவே இவ்வாறு செய்யப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு, ஒருசேர ஆதரவையும் எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.