தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான காமராஜரின், பிறந்த தினமான இன்று, 'கல்வி வளர்ச்சி தினமாக' கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக ஏழை, எளிய மக்கள் கல்வி கற்கவும், தமிழ்நாட்டில் கல்வித்துறையில் சிறந்த மாநிலமாக உருவாக்குவதிலும் காமராஜர் ஆற்றிய பங்கு அளப்பரியது.


அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், காமராஜருக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, கல்வித்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது என குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிடுகையில், "கே.காமராஜரின் பிறந்தநாளில் நினைவஞ்சலி செலுத்துகிறேன். அவரது தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவம், ஏழைகளை மேம்படுத்துவதற்காக அவர் எடுத்த முயற்சிகளுக்காக பரவலாக மதிக்கப்படுகிறார்.


 






கல்வி உள்ளிட்ட துறைகளில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. அவருடைய இலட்சியங்களை நிறைவேற்றி, நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்" என பதிவிட்டுள்ளார்.


"பாரத ரத்னா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே. காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகள். உண்மையான தேசபக்தர். வெகுஜன மக்களின் தலைவர். அவரின் அயராத உழைப்பு, நமது சமூகத்தின் நலிந்த பிரிவினரை உயர்த்துவதற்கு மற்றவர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. கல்வி தந்தையாக எப்போதும் நினைவில் நிற்பார்" என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் காலை உணவு திட்டமானது அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம் புதியதாக, அரசு உதவி பெறும் 3,995 அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில், முதல்வர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.