மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் காரை பாஜகவினர் வழி மறித்து காலணி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றார்.
அப்போது பாஜகவினரும் அஞ்சலி செலுத்த வந்ததாக கூறப்படுகிறது. அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு பாஜக கட்சியினர் செலுத்துமாறு, அமைச்சர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிடிஆர் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது, அவரது காரில் பாஜகவினர் காலணி வீசி தாக்கினர். உடனே அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் பாஜகவினரை அப்புறப்படுத்தியதையடுத்து அமைச்சர், அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், பிடிஆரின் மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணனின் உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அதற்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மதுரை மாநகர மாவட்ட தலைவர் சரவணன், புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் ஆகியோர் தலைமையில் பாஜகவினர் சுமார் 300 நபர்கள் திரண்டு இருந்தனர்.
முக்கிய பிரமுகர்கள் மட்டும் விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்பகுதியில் காத்திருந்தார்கள். அந்த சமயத்தில், சரவணன், அண்ணாமலை ஆகியோரை அங்கு வந்த தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பிடிஆர் தகாத வார்த்தைகளால் திட்டியும், மரியாதை குறைவாகவும் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டது மட்டுமல்லாமல் அலுவலர்களை பார்த்து "இந்த பரதேசி பயலுகளுக்கு என்ன தகுதி உள்ளது? யார் இவன்களை உள்ளே எனக் கூறி திட்டினார்.
இதன் பின்னர் அலுவலர்கள் சமரசம் செய்து வைத்தனர். பிறகு, பிடிஆர் மரியாதை செய்து அஞ்சலி செய்து கிளப்பியபின் எங்களது தலைவர்களையும் உள்ளே அஞ்சலி செய்ய அனுமதித்தனர். உள்ளே நடந்த விசயங்களை கேள்விபட்ட வெளியே நின்றுக்கொண்டிருந்த சில தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு, விமான நிலையத்தை விட்டு வெளியே சென்ற பிடிஆர் காரினை மறித்து எதிர்ப்பினை காட்டியுள்ளனர்.
அந்த சமயத்தில் காரினை எங்களது தொண்டர்கள் மீது ஏற்ற சொல்லி டிரைவரிடம் கத்தியதால் அவரது டிரைவரும் காரினை தொண்டர்கள் மீது ஏற்றி கொல்ல முயன்றுள்ளார். மேற்படி சூழ்நிலையில் இருதரப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு காவல் துறையினர் எங்களது தொண்டர்கள் மீது தடியடி பிரயோகம் செய்து விரட்டியுள்ளனர்.
எங்களது கட்சிகாரர்கள் காவல்துறையினரால் ஆண்கள்,பெண்கள் என்கிற வித்தியாசம் இல்லாமல் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர். அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் தூண்டுதலின் படியும் அவரின் கட்டளைப்படியும் காவல் துறையினர் மற்றும் திமுகவின் குண்டர்கள் எங்களது கட்சி காரர்களை கடுமையாக தாக்கி கொலைமுயற்சி செய்துள்ளனர்.
ஆகையால், காவல் ஆணையாளர் சமூகம் கருணை செய்து தியாகராஜன் மற்றும் திமுகவை சேர்ந்த தொண்டர்கள் போர்வையில் வந்த ரவுடிகள் மற்றும் குண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து குற்ற வழக்கு செய்ய உத்திரவிடுமாறு வேண்டுகின்றேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்