மாநிலத் தேர்தல்கள் மற்றும் 2024 தேசியத் தேர்தலில் கவனம் செலுத்தி வரும் பாஜக, பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு கட்சியில் புதிய பதவிகளை வழங்கி உள்ளது.


குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி, திரிபுரா முன்னாள் முதலமைச்சர் விப்லப் குமார் தேப், முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், மகேஷ் சர்மா ஆகியோருக்கு தேர்தலை கருத்தில் கொண்டு மாநிலங்களின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். விஜய் ரூபானி பஞ்சாப் பொறுப்பாளராகவும் விப்லப் தேப் ஹரியானா பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


கேரளா பொறுப்பாளராக பிரகாஷ் ஜவடேகரை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக ஹரியானா மாநில பொறுப்பாளராக இருந்த கட்சியின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டேக்கு பீகார் வழங்கப்பட்டுள்ளது.


பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவராக கருதப்படும் மூத்த தலைவர் ஓம் மாத்தூருக்கு மற்றொரு கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சக்திவாய்ந்த மத்திய தேர்தல் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்ட மாத்தூர், சத்தீஸ்கரின் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது.


பிகாரின் முன்னாள் அமைச்சர் மங்கள் பாண்டே. அவருக்கு மேற்கு வங்கத்தின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு, பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது, கடந்த மக்களவை தேர்தலில் மம்தாவின் திரிணாமுலுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை கைபற்றி இருந்தது. அவர் சுனில் பன்சாலுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். அவருக்கு வங்காளம் மற்றும் தெலுங்கானா பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலான தலைவர்கள் கட்சியில் வேறு எந்த பதவியை வகிக்கவில்லை. ஆனால், அவர்கள் முன்பு தேர்தல் பொறுப்பில் இருந்துள்ளார்கள். பாஜகவின் அடித்தளத்தை விரிவுபடுத்துவதிலும், குறிப்பிட்ட மாநிலங்களில் தேர்தலில் வெற்றி பெறுவதிலும் முழு கவனம் செலுத்தி வருவதால், வேறு கட்சி பதவிகளால் அவர்கள் கவனத்தை சிதறவிடாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


ராஜஸ்தானில் அருண் சிங் மற்றும் மத்திய பிரதேசத்தில் முரளிதர் ராவ் போன்ற சில பொறுப்பாளர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். லக்ஷ்மிகாந்த் வாஜ்பாய் ஜார்கண்ட் மாநிலத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திரிபுராவை மகேஷ் சர்மா கவனித்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பாக தொலைகாட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் சம்பித் பத்ரா வடகிழக்கு மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். கட்சியின் தேசிய செயலாளர் ரிதுராஜ் சின்ஹா ​​இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.