இந்தியா வான்வெளியில் 10 நிமிடங்களுக்கும் மேலாக பாகிஸ்தான் ராணுவ விமானம் பறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோசமான வானிலையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் உறவு:
அண்டை நாடான பாகிஸ்தான் உடனான இந்தியாவின் உறவு பல ஆண்டுகளாகவே மோசமாக தான் உள்ளது. குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இருநாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. பேச்சுவார்த்தை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வான்மார்கத்தை பயன்படுத்துவதை கூட, இந்தியா முற்றிலுமாக தவிர்த்து வருகிறது. இந்த சூழலில் தான் பாகிஸ்தானின் ராணுவ விமானம் இந்திய வான்வெளியில் பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தரையிறங்குவதில் சிக்கல்:
கடந்த 4ம் தேதி இரவும் 8 மணியளவில் பாகிஸ்தான் ராணுவப்படையை சேர்ந்த பிகே 248 எனும் விமானம், மஸ்கத்திலிருந்து தாய்நாடு திரும்பியுள்ளது. லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால், அங்குகொட்டிய கனமழை காரணமாக விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
வானில் வட்டமடித்த விமானம்:
தொடர்ந்து, விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டபோது, போயிங் 777 வகையை சேர்ந்த அந்த விமானத்தை தற்போதைய சுழலில் தரையிறக்குவது பாதுகாப்பற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வானிலேயே சிறிது நேரம் வட்டமடிக்குப்படியும் விமான ஓட்டி வலியுறுத்தப்பட்டுள்ளார்.
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் ராணுவ விமானம்:
அவ்வாறு வானில் வட்டமடிக்கையில் தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் குறைந்த உயரம் காரணமாக, விமான ஓட்டி வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது. மணிக்கு 292 கிமீ வேகத்தில் 13,500 அடி உயரத்தில் பறந்த விமானம், பஞ்சாபின் பதானா காவல் நிலையத்திலிருந்து இந்திய வான் எல்லைக்குள் நுழைந்துள்ளது. அங்கு பஞ்சாபில் உள்ள தரன் சாஹிப் மற்றும் ரசூல்பூர் நகரங்கள் வழியாக 40 கிலோமீட்டர் பயணம் செய்த பிறகு, விமானம் நௌஷேஹ்ரா பண்ணுவானில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்பியது. இந்திய எல்லையில் 20 ஆயிரம் அடி உயரத்தில் சுமார் 7 நிமிடங்கள் வான்வெளியில் பறந்துள்ளது.
மீண்டும் வழிதவறிய விமானம்:
ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த விமானம் பாகிஸ்தானின் பஞ்சாபின் கசூர் மாவட்டத்தில் உள்ள டோனா மபோகி, சாந்த், துப்சாரி கசூர் மற்றும் காதி கலஞ்சர் கிராமங்கள் வழியாக இந்திய வான்வெளிக்குள் மீண்டும் நுழைந்தது. மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, விமானம் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள லகா சிங்வாலா ஹிதர் கிராமத்தில் இருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் மீண்டும் நுழைந்தது. அப்போது, மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் 23,000 அடி உயரத்தில் அந்த விமானம் பறந்துள்ளது.
தாயகம் திரும்பிய விமானம்:
3 நிமிடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் நுழைந்ததும் விமானம் முல்தான் நகருக்குச் சென்றது. அந்த விமானம் இந்திய எல்லையில் பத்து நிமிடங்களில் மொத்தம் 120 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளது. இதுதொடர்பாக மத்திர அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.