தேர்தலில் வெற்றி பெற்றால் பிரியங்கா காந்தியின் கன்னங்களை போன்று சாலைகளை அமைப்பேன் என முன்னாள் எம்பியும் பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான ரமேஷ் பிதுரி கூறி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் அவர் இப்படி பேசி இருப்பதாக விமர்சனம் எழுந்து வருகிறது.


பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது ஒன்றும் புதிதல்ல. அவர்கள் இப்படி பேசுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பற்றியும் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குறித்தும் அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.


பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சை கருத்து:


சமீபத்தில் கூட, கேரளா ஒரு மினி பாகிஸ்தான் என்றும் அதனால்தான் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கு போட்டியிட்டனர் என்றும் அவர்களுக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றும் மகாராஷ்டிரா அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான நிதேஷ் ரானே தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.


இந்த சர்ச்சையே அடங்காத நிலையில், பிரியங்கா காந்தி குறித்து டெல்லி கல்காஜி தொகுதி வேட்பாளர் ரமேஷ் பிதுரி பேசிய கருத்துகளுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய ரமேஷ் பிதுரி, "வரவிருக்கும் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல் எனது சட்டமன்றத் தொகுதியின் சாலைகளை அமைப்பேன்" என்றார்.


கடும் எதிர்ப்பை தொடர்ந்து தன்னுடைய கருத்துகளுக்கு விளக்கம் அளித்த ரமேஷ் பிதுரி, "லாலு யாதவ் ஒருமுறை பீகார் சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்கள் போல் சீராக மாற்றுவேன் என்று கூறினார். ஆனால், அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டார்.


பாஜக நிர்வாகி பேசியது என்ன?


எவ்வாறாயினும், ஓக்லா மற்றும் சங்கம் விஹாரில் உள்ள சாலைகளை நாங்கள் மாற்றியமைத்தது போல், கல்காஜியின் ஒவ்வொரு சாலையும் பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போல் மென்மையாக மாற்றி அமைப்பேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்றார்.


ரமேஷ் பிதுரி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத், "பாஜக, பெண்களுக்கு எதிரான கட்சி. பிரியங்கா காந்தி குறித்து ரமேஷ் பிதுரி கூறியிருப்பது வெட்கக்கேடான கருத்து மட்டுமல்ல அவரது கேவலமான மனநிலையையும் காட்டுகிறது. எந்த தண்டனையையும் சந்திக்காமல் நாடாளுமன்றத்தில் சக எம்.பி.யை மோசமாக பேசிய ஒருவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?" என்றார்.