கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணி அமைத்து, பாஜகவை வீழ்த்த முனைப்பு காட்டி வருகின்றன.
பரபரப்பான தேர்தல் களம்:
இதற்காக பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், நாடு முழுவதும் பயணம் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு முதல் வெற்றியாக பிகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 15 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 மாநில முதலமைச்சர்கள் உட்பட 32 எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், பாஜகவும், தன்னுடைய கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்த வகையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
அண்மையில் கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் அபார வெற்று பெற பாஜக ஆட்சியை இழந்தது. இதனிடையே, முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மகன் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இதுவரை இல்லாத அளவிலான மோசமான தோல்வியை சந்தித்தது.
கர்நாடகாவில் உருவாகும் புதிய கூட்டணி:
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், அந்த கட்சி வெறும் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது, கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைவது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான பசவராஜ் பொம்மை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கூட்டணி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "கலந்துரையாடல் எதிர்கால அரசியல் முன்னேற்றங்களை தீர்மானிக்கும்.
எங்கள் தலைமையும், எச்.டி.தேவ கவுடாவும் சேர்ந்து இதில் முடிவு எடுப்பர். எச்.டி.குமாரசாமி சில கருத்துகளை தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை இந்த திசையில் தொடரும்" என்றார். பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
பாஜகவை நோக்கி நகரும் மாநில கட்சிகள்:
முன்னதாக, பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான பி.எஸ். எடியூரப்பா, இதுகுறித்து பேசுகையில், "எனது கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியும் இணைந்து கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்துப் போராடும்" என்றார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய எச்.டி.குமாரசாமி, "மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்படும்" என்றார்.
ஆந்திராவில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தெலங்கு தேச கட்சி விரும்புவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. பரபரப்பான அரசியல் கட்டத்தில் மாநில கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.