அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் ஒன்றாக உத்தர பிரதேசம் உள்ளது. நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ள உத்தர பிரதேசம், இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.


பிரிஜ் பூஷனுக்கு வாய்ப்பு மறுப்பு:


உத்தரப் பிரதேசத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் தொகுதிகளை கைப்பற்றுபவர்களே மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதை தீர்மானிக்கிறார்கள். கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு உத்தர பிரதேசத்தில் பெற்ற வெற்றி முக்கிய பங்காற்றியது.


கடந்த முறை போன்று இந்த முறையும் அதிக தொகுதிகளை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், கணிசமான தொகுதிகளில் சமாஜ்வாதி - காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி கடும் போட்டி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே 16 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. வரும் 7ஆம் தேதி 10 தொகுதிகளுக்கும் 13ஆம் தேதி 13 தொகுதிகளுக்கும் 20ஆம் தேதி 14 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.


ரேபரேலி தொகுதியில் சர்ப்ரைஸ் கொடுத்த பாஜக:


அமேதி, கைசர்கஞ்ச், ரேபரேலி உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அமேதி தொகுதிக்கு பாஜக ஏற்கனவே வேட்பாளரை அறிவித்துவிட்ட நிலையில், கைசர்கஞ்ச், ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது.


அதன்படி, கைசர்கஞ்ச் தொகுதியில் கரண் பூஷன் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மகன்தான் கரண் பூஷன் சிங்  ஆவார்.


பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டம் விளையாட்டு உலகையே அதிர வைத்தது. மேற்கு உத்தர பிரதேசத்தில் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக வலம் வரும் பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் கைசர்கஞ்ச் தொகுதி எம்.பி-ஆக உள்ளார்.


பாலியல் புகாரில் சிக்கியதால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கக்கூடாது என தொடர் எதிர்ப்பு கிளம்பியது. எனவே, பிரிஜ் பூஷனுக்கு பதில் அவரது மகன் கரண் பூஷனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மல்யுத்த சங்கத்தின் தலைவராக உள்ள கரண் பூஷன் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரராகவும் இருந்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் ரே பரேலி தொகுதியை பொறுத்தவரையில், தினேஷ் பிரதாப் சிங் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக சார்பாக போட்டியிட்டு சோனியா காந்தியிடம் தோல்வி அடைந்தார் தினேஷ் பிரதாப் சிங். இந்த முறை அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.